620 ஏக்கர் கொண்ட கிராமத்தையே அபகரித்ததாக ஜி.எஸ்.டி ஆணையர் மீது புகார்? எப்படி நடந்தது?
Gujarat GST Commissioner: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தையே ஜி.எஸ்.டி. ஆணையர் விலைக்கு வாங்கியதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வால்வி, தற்போது அகமதாபாத்தில் ஆணையராக பணியாற்றுகிறார். இவர், மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டாடி பள்ளத்தாக்கில் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பரில் வசிக்கும் சந்திரகாந்த் வால்வி, தற்போது குஜராத்தின் அகமதாபாத்தில் ஜிஎஸ்டியின் தலைமை ஆணையராக உள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, மகாபலேஷ்வருக்கு அருகிலுள்ள ஜடானி என்கிற முழு கிராமத்தையும் வாங்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படி வாங்கினார்:
அரசாங்கம், அந்த கிராமத்தின் நிலப்பகுதிகளை கைப்பற்ற போவதாக கூறி, அந்த கிராம மக்களிடம் இருந்து வாங்கியுள்ளார். இதன் மூலம் அங்குள்ள 620 ஏக்கர் நிலம், அரசாங்க பதவியை தவறாக பயன்படுத்தி நிலங்களை கைப்பற்றினார் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நிலம் வாங்கியதில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, வனப் பாதுகாப்புச் சட்டம் 1976, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 போன்ற பல முக்கியமான சட்டங்கள் தொடர்ந்து மீறப்பட்டன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த சட்டங்களை மீறுவது இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்த மீறல்கள் பல்லுயிர் இழப்பு, காற்று மற்றும் நீர் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாதிப்பு:
தற்போது, அனுமதியின்றி கட்டுமானம், தோண்டுதல், மரங்கள் வெட்டுதல், சட்டவிரோத சாலைகள், வன எல்லையில் இருந்து மின்சாரம் வழங்குதல் போன்றவற்றால் உட்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டு
இந்நிலையில், அந்த பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள், பெரிய அளவிலான சுரங்கங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகின்றன, ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, எந்த ஒரு அரசு அதிகாரியும் சரி பார்க்க வருவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து, உள்ளூர் சமூக ஆர்வலர் சுஷாந்த் மோர் கூறுகையில், ஜிஎஸ்டி அதிகாரி கிராமத்தில் உள்ள அனைவரிடமும் அவர்களின் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும் என்று கூறி நிலத்தை ஏமாற்றி வாங்கினார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறும் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒரு முழு கிராமத்தின் நிலத்தையே, அதிகாரப்பதவியை பயன்படுத்தி நிலங்களை பெற்றது, தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது.
Also Read: ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?