”பாஜகவே போதும்.. மாற்றம் வேண்டாம்..” பரிதாபமாகத் தோற்ற ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்..!
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசுதன் காத்வி தோல்வியடைந்துள்ளார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசுதன் காத்வி தோல்வியடைந்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பாஜக 61 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதோடு 96 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 157 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் குஜராத்தில் 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக.
இந்த தேர்தலில் பாஜகவுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்ட நிலையில், கத்துக்குட்டியான ஆம் ஆத்மி பல இடங்களில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசுதன் காத்வி தோல்வியடைந்துள்ளார். கம்பாலியா தொகுதியில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 59,089 வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அயர் முலுபாய் 77305 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஆஹிர் விக்ரம்பாய் 44715 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் 1982ல் பிறந்த இசுதான் காத்வி ஒரு செய்தியாளர் ஆவார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணி புரிந்த இவர், குஜராத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது டாங் மற்றும் கப்ரதா பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டதில் ரூ.150 கோடி ஊழல் நடந்ததை வெளிக்கொண்டுவந்தார்.
அதோடு, பல்வேறு பரபரப்பு செய்திகளை செய்தியாளராக இருந்தபோது வெளியிட்டார். கடந்த ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்த அவர் ஜூலை மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். பாஜக போதும், தற்போது நமக்குத் தேவை மாற்றம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தியிருந்தார்.
ஆனால், தேர்தலின் முடிவில் பாஜகவே போதும். தற்போது மாற்றம் தேவையில்லை என்று மக்கள் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசுதான் காத்வி தோல்வியடைந்துள்ளது ஆம் ஆத்மி கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.