GST Collection: அம்மாடியோவ்.. ஜூன் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் இவ்வளவா..? தமிழ்நாடு 4வது இடம்..!
நாட்டில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வசூல் செய்யப்பட்ட அதிக தொகை 1.87 லட்சம் கோடி ரூபாயாகும். இது, இந்தாண்டு ஏப்ரம் மாதம் வசூலிக்கப்பட்ட தொகையாகும்.
கடந்த ஜூன் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1 லட்சத்து 61 ஆயிரம் கோடியே 497 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, கடந்தாண்டு, ஜூன் மாதம் வசூல் செய்த தொகையை விட 12 சதவிகிதம் அதிகம். நாட்டில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து வசூல் செய்யப்பட்ட அதிக தொகை 1.87 லட்சம் கோடி ரூபாயாகும்.
உச்சம் தொட்ட ஏப்ரல் மாதம்:
இது, இந்தாண்டு ஏப்ரம் மாதம் வசூலிக்கப்பட்ட தொகையாகும். இந்தாண்டு, மே மாதம், ஜிஎஸ்டி தொகையாக 1 லட்சத்து 57 ஆயிரத்து 90 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 4ஆவது முறையாக 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய், இதுவரை, 7 முறை 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து 16ஆவது முறையாக 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில், "2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,61,497 கோடி. இதில், சிஜிஎஸ்டி ரூ. 31,013 கோடி. எஸ்ஜிஎஸ்டி ரூ. 38,292 கோடி.
இந்த மாத வசூல் எவ்வளவு..?
ஐஜிஎஸ்டி ரூ.80,292 கோடி (பொருட்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்த ரூ. 39,035 கோடி வசூல் உள்பட) செஸ் வரியாக 11,900 கோடி கிடைத்துள்ளது (பொருட்களை இறக்குமதி செய்ததன் மூலம் சேகரிக்கப்பட்ட ரூ. 1,028 கோடி உட்பட). ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.30,269 கோடியும் அரசு செட்டில் செய்துள்ளது.
வழக்கமாக கொடுக்க வேண்டிய தொகையை செட்டில் செய்த பிறகு, ஜூன் மாதத்திற்கான மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டியில் இருந்து ரூ 67,237 கோடி ஆகும். எஸ்ஜிஎஸ்டியில் இருந்து ரூ 68,561 கோடி ஆகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நிதியாண்டுகளாக ஜிஎஸ்டி வசூல் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2022 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 1.10 லட்சம் கோடி ரூபாயாகும்.
கடந்த 2023 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 1.51 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த 24 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை 1.69 லட்சம் கோடி ரூபாயாகும்.
அதிக தொகையை ஈட்டுவதில் தமிழ்நாடுக்கு 4ஆவது இடம்:
லட்சத்தீவுகளின் ஜிஎஸ்டி வருவாய் வசூல் மாநிலங்களிலேயே அதிகபட்ச வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில், 3316 சதவிகிதம் வளர்ச்சி கண்டு ஜிஎஸ்டி வருவாய் வசூல் 21.86 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, 26 ஆயிரத்து 98 கோடியே 78 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டியாக மகாராஷ்டிரா வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிக பட்ச ஜிஎஸ்டி தொகையை வசூல் செய்த மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. இங்கு, 9,600 கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. மாநிலங்களின் கரத்தை வலுப்படுத்த மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 14ஆவது தவணையாக தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1 லட்சத்து 40,318 கோடியை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது. ஜிஎஸ்டி வரி பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.5,769 கோடியை மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.