GST Council meeting: சிமெண்ட் மீதான வரி குறைகிறதா? நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில், டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீது வரி விகிதங்களை குறைப்பது மற்றும் ஏற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம்:
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதியன்று காணொலி காட்சி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றியும், பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், கூட்டதில் போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியும் விவாதத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு வணிகர்களிடையே அதிகரித்துள்ளது.
வரி விலக்கா?
நிலக்கரி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செஸ் வரி விலக்கை நீட்டிப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல் வரிகளுக்கு இடையே வரி சமநிலையை கொண்டு வருதல், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் தினசரி பயன்படுத்தப்படும் சுகாதார பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிமெண்ட் மீதான வரி குறையுமா?
இதனிடையே, சிமெண்ட் மீது விதிக்கப்பட்டு வரும் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் துறையினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பான கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ”சிமெண்ட் மீதான வரியை குறைப்பது என்பது என்னிடம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் தான் அதனை முடிவு செய்ய வேண்டும்” என கூறி இருந்தார். அதாவது அனைத்து மாநில நிதியமைச்சர்களும் ஒப்புக் கொண்டால், சிமெண்ட் மீதான வரி விகிதம் குறைக்கப்படும் என விளக்கியிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற உள்ள கூட்டத்தில், அதுதொடர்பாக விவாதிக்கபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் எப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடத்த வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆண்டே கோரிக்கை வைத்து இருந்தார். அதுகுறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக, 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஐந்தரை மாத இடைவெளிக்குப் பிறகும், 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகும் நடைபெற்றது. ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்பது அவசியமாகும்.