ஆளுநர் vs முதலமைச்சர்... எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் என்னதான் பிரச்சினை?
இதை நாம் ஒரு தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. ஏனென்றால், கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர், மாநில அரசுக்கு இடையே நிகழ்ந்து வரும் மோதலின் தொடர்ச்சியாகவே இதை பார்க்க வேண்டும்.
சமீப காலமாகவே, எதிர்கட்சி மாநிலங்களுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மோதல் வெடித்தது.
மாநில அரசு தயார் செய்த ஆளுநர் உரையில் சில பத்திகளை வாசிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வரலாற்றில் இதுவரை நடைபெறாத அளவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் தனது உரையை வாசித்து கொண்டிருந்தபோது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது பெரும் அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது.
இதை நாம் ஒரு தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. ஏனென்றால், கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர், மாநில அரசுக்கு இடையே நிகழ்ந்து வரும் மோதலின் தொடர்ச்சியாகவே இதை பார்க்க வேண்டும்.
கேரளா:
கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசு நியமித்திருந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தன்னுடைய பொறுப்பு என ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பெரிய பிரச்சினை நிலவி வந்தது.
அதன் உச்சக்கட்டமாக, தன்னுடைய பதவியின் கண்ணியத்தை குறைக்கும் அமைச்சர்கள், அவர்களின் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என பகீரங்க எச்சரிக்கை விடுத்தது சுதந்திர இந்திய வரலாற்றில் நடைபெறாத சம்பவமாக மாறியது. தற்போது, துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தெலங்கானா:
மற்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை போலவே, தெலங்கானாவில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அரசியலில் புயலை கிளப்பி இருந்தார்.
சமீபத்தில் கூட, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தெலங்கானாவுக்கு சென்றிருந்தார். அவரை வரவேற்க சென்றிருந்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவும் ஆளுநரும் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டனர். ஆனால், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உணவு விருந்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். இது பேசு பொருளாக மாறியது.
மேற்கு வங்கம்:
மற்ற மாநிலங்களை காட்டிலும் மேற்குவங்கத்தில்தான் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் பெரிய பிரச்னை நீடித்து வந்தது. மேற்கு வங்க ஆளுநராக ஜக்தீப் தன்கர் பதவி வகித்தபோது, மம்தா பானர்ஜியும் அவரும் மோசமான உறவையே கொண்டிருந்தனர். ஆளுநருக்கு எதிராக புகார் கடிதங்கள் குடியரசு தலைவருக்கு சென்ற வண்ணம் இருந்தது.
கோப்புகளை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்ததாகவும் சாதாரண விவகாரங்களுக்கு எல்லாம் தலைமை செயலாளர், மாநில அரசின் மூத்த அதிகாரங்களை வரவழைத்து விளக்கம் கேட்டதாகவும் அப்போதையை ஆளுநர் தன்கருக்கு எதிராக மம்தா குற்றச்சாட்டு சுமத்தினார்.
இந்த மாதிரி பல்வேறு விவகாரங்களில் முதலமைச்சரின் அதிகாரங்களுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் நடந்து கொண்டதாக மேற்குவங்கத்தின் ஆளும் கட்சி குற்றச்சாட்டு சுமத்தி இருந்தது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் தன்கர். குடியரசு துணை தலைவராக தன்கர் பதவியேற்ற பிறகு, அங்கு பிரச்னை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.