Lok Sabha New Bill: பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா - மத்திய அரசு கொண்டுவரும் அதிரடி சட்டம்
கடுமையான குற்றங்களில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிரடி சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு. விவரம் இதோ.

பிரதமர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டடோர், கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ, அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்டத்திற்கு வழிவகுக்கும் மசோதா ஒன்றை மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறது.
இன்று தாக்கலாகும் மசோதா
நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் பிரச்னை உள்ளிட்டவைகளை விவாதிக்கக் கோரி, தொடக்க நாள் முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலிலும், மத்திய அரசு தொடர்ந்து பல மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு முக்கிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா
இன்று மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்யும் ஒரு மசோதா, பிரதமர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் எடுக்கப்பட்டாலோ, அவர்களை பதவிநீக்கம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவாகும்.
இந்த மசோதா மூலமாக, அரசியலமைப்பின் 75, 164 மற்றும் 239AA பிரிவுகள், 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் 54-வத பிரிவு திருத்தப்படுகிறது. அதன்படி, பிரதமர், முதலமைச்சர், எந்த ஒரு மாநில அமைச்சரும், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட நிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டால், 31-வது நாளில் அவர்களது பதவி தானாகவே நீக்கம் ஆகிவிடும்.
இந்த மசோதாவின் உட்பிரிவுப்படி, அமைச்சர் ஒருவர் பதவிக்காலத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-வது நாளில், முதலமைச்சரின் ஆலோசனைப்படி, துணை நிலை ஆளுநரால் அவர் நீக்கப்பபடுவார் என்று உள்ளது. அப்படி முதலமைச்சர் ஆலோசனை வழங்காத பட்சத்தில், 31-வத நாளில் அமைச்சர் தனது பதவியை தானாகவே இழப்பார்.
தற்போது இந்த நடைமுறை, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் முன்மொழியப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஒழுக்கத்தை பாதுகாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாகவும் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளார்.





















