கோவாவின் முன்னாள் எம்.எல்.ஏவை அடித்தே கொன்ற ஆட்டோ டிரைவர்! அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சோகமான சம்பவத்தில், கோவாவின் முன்னாள் எம்.எல்.ஏ சனிக்கிழமை இறந்தார்.

கர்நாடகாவில் கோவாவின் முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லதார் மீது ஆட்டோ டிரைவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் மம்லதார் உயிரிழந்தார்.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சோகமான சம்பவத்தில், கோவாவின் முன்னாள் எம்.எல்.ஏ சனிக்கிழமை இறந்தார்.
காங்கிரஸ் தலைவரும் கோவாவின் முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லதார். இவருக்கு வயது 68. 2012 இல் அரசியலில் சேருவதற்கு முன்பு, மம்லதார் கோவாவில் துணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் அதிகாரியாக இருந்தார்.
இந்நிலையில், மம்லதார் கர்நாடகாவிற்கு ஒரு வணிகப் பயணத்தில் இருந்தார். அப்போது அவரின் கார் ஆட்டோ ஒன்றின் மீது இடித்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தின் போது, ஆட்டோ ஓட்டுநர் அவரை பலமுறை தாக்கியுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கார் இடித்ததும் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் மாஜி எம்.எல்.ஏவை பல முறை தாக்கியுள்ளார். இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். சில நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அங்கிருந்த பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “தாக்குதலுக்குப் பிறகு, மம்லதார் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார், அங்கு அவர் படிக்கட்டில் சரிந்து விழுந்தார். அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
மம்லதார் 2012-2017 க்கு இடையில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை (எம்ஜிபி) பிரதிநிதித்துவப்படுத்தும் கோவா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் 2022 இல் காங்கிரசில் சேர்ந்தார், அந்த ஆண்டு கோவா தேர்தலில் மட்காய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.





















