இந்தியாவின் தலைமை... 3 முக்கியத் துறைகள் உறுதியான முன்னேற்றம் அடையும்: கீதா கோபிநாத் நம்பிக்கை!
இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பால் மூன்று முக்கிய துறைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைய முடியும் என சர்வதேச நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரம், சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்தோனேசியாவிடம் இருந்த அதன் தலைவர் பதவியை இந்தியா டிசம்பர் 1ஆம் தேதி ஏற்று கொண்டது. அதன் தொடர்ச்சியாக, அடுத்தாண்டு ஜி - 20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பால் மூன்று முக்கிய துறைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைய முடியும் என சர்வதேச நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
ஜி-20 அமைப்பின் ஓர் அங்கமாக நடத்தப்பட்டுள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கீதா கோபிநாத் இந்தியா வந்திருந்தார்.
கூட்டத்தில் பேசியதை விளக்கி ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட அவர், "குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் அதிக எண்ணிக்கையில் கடன் நெருக்கடியில் உள்ளன. கடன் பிரச்சினையை தீர்க்க ஜி -20 கட்டமைப்பு நம்மிடம் இருந்தாலும், சரியான நேரத்தில் தீர்வைப் பெற அமைப்பின் வலிமையை கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும்" என்றார்.
சமீபத்தில், கிரிப்டோகரன்சி நிலைகுலைந்தது குறித்து பேசிய அவர், "சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட தரநிலைகளும் விதிமுறைகளும் அவசியமானது என்பது தெளிவாகத் தெரிகிறது. 2023ஆம் ஆண்டுக்குள் அந்த நிலையில் முன்னேற்றம் அடைவது உறுதியான முடிவாக இருக்கும்" என்றார்.
Here are three critical areas in which India’s @g20org Presidency can make concrete progress…. pic.twitter.com/tLFkc31Qqz
— Gita Gopinath (@GitaGopinath) December 14, 2022
கடன் நெருக்கடியில் இருந்து மீள்வது, கிரிப்டோகரன்சியை ஒழுங்கு செய்வது, காலநிலை மாற்றத்திற்கு நிதி ஒதுக்குவது ஆகிய மூன்று முக்கிய துறைகளில் இந்தியாவின் தலைமையிலான ஜி-20 அமைப்பால் உறுதியான முன்னேற்றத்தை அடைய முடியும் என அவர் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு நிதி ஒதுக்குவது குறித்து விரிவாக பேசியுள்ள அவர், "வளரும் நாடுகளை பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றவும் பருவநிலை தணிப்புக்கு பங்களிக்கவும் அவர்களுக்கு அதிக நிதியுதவி தேவைப்படும். அது உறுதியான முன்னேற்றம் செய்யக்கூடிய மூன்றாவது பகுதியாகும்" என்றார்.
ஜி - 20 தலைவர் பதவியை ஏற்றிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்தியாவின் ஜி-20 நிகழ்ச்சி நிரல் உள்ளடக்கமான, லட்சியமான, செயல் சார்ந்த மற்றும் தீர்க்கமானதாக இருக்கும்.
இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒன்றாகச் செயல்படுவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். இந்தியாவின் ஜி - 20 தலைமையை நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான தலைமையிடமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்" என கூறினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து குறிப்பிடுகையில், "சவாலான சூழ்நிலையில் ஜி 20 தலைவர் பதவியை இந்தியா ஏற்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு கூட்டு தீர்வுகளை காண்பதற்கு பெரிய நாடுகளுக்கு அழத்தம் தரப்படும்" என்றார்.