லாஸ்ட் சான்ஸ்.! பொங்கலுக்கு மதுரை, நெல்லை, தென்காசி செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு- முன்பதிவு எப்போது.?
பொங்கல் பண்டிகையையொட்டி பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு வரும் நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து தென்காசி வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் கொண்டாட்டம்- சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் சொந்த ஊரில், உறவினர்கள், நண்பர்களோடு கொண்டாட செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று நள்ளிரவு வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இதே போல சிறப்பு ரயில் ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலமாகவும் பல லட்சம் சென்னையை காலி செய்துவிட்டு புறப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு குறிப்பாக மதுரை, நெல்லை, தென்காசி ஆகிய ஊர்களுக்கு செல்ல கடைசி நேர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி, மதுரை, நெல்லைக்கு சிறப்பு ரயில்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு நடவடிக்கையாக சென்னை எழும்பூர் – தென்காசி இடையே ஒருவழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை இயக்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, (ரயில் எண் 06072) சென்னை எழும்பூர் – தென்காசி ஒருவழி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், ஜனவரி 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் எனவும், மறுநாள் ஜனவரி 14ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு தென்காசியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாகவும், இதில் 8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கான பெட்டிகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயிவ் கூறியுள்ளது.
எந்த வழித்தடத்தில் ரயில் செல்லும்
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தென் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த சேவையை பெரிதும் பயன்படுத்தும் வகையில் நேர அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















