கேரளாவில் பாலின சமத்துவ சீருடை… இஸ்லாமிய கட்சியினர் பள்ளி வாயிலில் போராட்டம்!
சமஸ்தா கேரளா ஜமியத்துல் உலாமா ஏபி பிரிவினரும், இகே பிரிவினரும், ஜமாத் இஸ்லாம் கட்சியினரும், கேரள நடுவத்துல் முஜாஹிதீன் கட்சியினர் ஆகியோர் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இங்குள்ள அரசுப் பள்ளியில் பாலின வேறுபாடு இல்லாமல் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாலின பாகுபாட்டைத் தவிர்க்க முயற்சி எடுத்துள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பாலுசேரி அரசுப் பள்ளியில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே நிறத்தில் சட்டை மற்றும் கால் சட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக எர்ணாகுளம் மாவட்டம் வளையன்சிராவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், ஐந்தாம் வகுப்புக்கு கீழானவர்கள் என்பதால் இரு பாலருக்கும் முழங்கால் அளவிலான சமத்துவ சீறுடை வழங்கியிருந்தார்கள்.
The protest against the introduction of gender-neutral uniform Balussery Government Girls higher secondary school in Kozhikode, Kerala was led by Co-ordination committee of Muslim organisations that includes Samastha (AP), Samastha (EK), KNM, JIH etc.
— ANI (@ANI) December 16, 2021
கேரள அரசு கல்வித் துறையில் 'இதுபோன்ற புரட்சி'கரமான செயல்களில் ஈடுபடுகிறது, அதே வேளையில் இந்தச் செயல்களால் பல விமர்சனத்துக்கும் ஆளாகி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தனது முற்போக்கு கருத்துகளை பள்ளி மாணவர்களிடையே கட்டாயப்படுத்தி திணிப்பதாக பல அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன. அப்பள்ளியின் இந்தத் திட்டத்தை எதிர்த்து இஸ்லாம் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மூன்று மணி நேரப் போராட்டம் ஆசிரியர் பெற்றோர் சங்கப் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்தது. ஆனால் வெளியிலிருந்து பல இஸ்லாமிய கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர். சமஸ்தா கேரளா ஜமியத்துல் உலாமா ஏபி பிரிவினரும், இகே பிரிவினரும், ஜமாத் இஸ்லாம் கட்சியினரும், கேரள நடுவத்துல் முஜாஹிதீன் கட்சியினர் ஆகியோர் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரபரப்பு சூழல் நிலவாமல் இருக்க பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இத்திட்டத்திற்கு ஆதரவும் பெருகிவருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன. கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் பிந்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 14) இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பாலுசேரி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப் படுகிறது. 11, 12ஆம் வகுப்புகள் வரும் கல்வியாண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தார். மேலும் இந்த சீருடை மாற்றம் மாணவிகளுக்கு சவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ள இந்த உடை மாணவிகளுக்கு ஏதுவாக அமையும் என்று கூறியுள்ளார். கேரளாவில் முதல்முறையாக பாலின பாகுபாடற்ற சீருடை 2018-ல் கொச்சியின் பெரும்பாவூர் அருகே வளையன்சிரங்கரா அரசு ஆரம்ப பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.