போபாலில் வாயுக் கசிவு! குழந்தைகள் மயக்கம்… பொதுமக்களுக்கு இருமல், வாந்தி, கண்ணெரிச்சல்!
பலருக்கு இருமல் மற்றும் வாந்தியெடுக்கத் தொடங்கியதாகவும், அவர்களில் சிலருக்கு தங்கள் கண்களில் எரியும் உணர்வு இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று மாலை வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, பலர் இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதியுற்றனர். அவர்களில் இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாந்தி கண்ணெரிச்சல்
போபால் நகரின் மதர் இந்தியா காலனியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த குளோரின் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் அப்பகுதியில் கடுமையான வாயு துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பலருக்கு இருமல் மற்றும் வாந்தியெடுக்கத் தொடங்கியதாகவும், அவர்களில் சிலருக்கு தங்கள் கண்களில் எரியும் உணர்வு இருந்ததாகவும் தெரிவித்தனர்.
லீக்கான சிலிண்டர்
கடும் துர்நாற்றம் வீசியதால் இரண்டு குழந்தைகள் மயங்கி விழுந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலிண்டரை சரிசெய்ய முயன்றனர். ஆனால் மாலையில் மீண்டும் எரிவாயு கசியத் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீரில் போடப்பட்ட சிலிண்டர்
அரை மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போபால் கலெக்டர் அவினாஷ் லவானியா தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் குடிமை அமைப்பு அதிகாரிகள் லீக் ஆன சிலிண்டரை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். அப்படி செய்ததன் மூலம் லீக் ஆகும் எரிவாயு தண்ணீரில் கரைந்துவிடும் என்றும் கலெக்டர் கூறினார்.
யாருக்கும் பாதிப்பில்லை
சுமார் 900 கிலோ குளோரின் வாயு கொண்ட சிலிண்டரை கிரேன் மூலம் தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டுள்ளனனர். "நெரிசல் போன்ற சூழ்நிலைகள் எதுவும் இல்லை, சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை அடிப்படையில் ஒரு சிலர் மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான் மருத்துவர்களிடம் பேசினேன், கவலைப்படும்படியாக ஒன்றும் இல்லை," என்று கலெக்டர் லாவனியா கூறினார்.
சுமார் 400 குடும்பங்கள் வசிக்கும் மதர் இந்தியா காலனி, இத்கா மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு 1984 போபால் விஷவாயு சோகத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 5.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்த மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எரிவாயு கசிவுக்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.