Rakesh Tikait: கான்ஸ்டபிள் டூ விவசாயிகளின் ஹீரோ.... யார் இந்த ராகேஷ் திகைத்?
லக்னோ மகா பஞ்சாயத்தை தடுக்க நினைத்தால் பிரதமரும், உத்தரப் பிரதேச முதலமைச்சரும் எங்கும் கால் வைக்க முடியாது - ராகேஷ் திகைத்
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்களையும் முறையாக வாபஸ் வாங்கும்வரை நாங்கள் வெளியேற மாட்டோம் எங்கள் போராட்டம் ஓயாது என்று ஒருவர் முழங்கியிருக்கிறார்.
அவர் பெயர் ராகேஷ் திகைத். தற்போது வட இந்தியாவில் ஒட்டுமொத்த விவசாயிகளின் தலைவர்,ஹீரோ என அனைத்து நிலைகளிலும் ராகேஷ் இருக்கிறார்.
டெல்லி காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்து படிப்படியாக உதவி ஆய்வாளராக பணி உயர்வு பெற்றார். இருந்தாலும் அவர் அந்த பணியில் நீடிக்கவில்லை. காரணம் அவரது தந்தையான மகேந்திர சிங் திகைத்துக்குள் ஓடிய போராட்ட ரத்தமும்,விவசாய உணர்வும்.
மகேந்திர சிங் திகைத் ராஜீவ் காந்தி ஆட்சி செய்த காலத்தில் நாடாளுமன்றம் நோக்கி 5 லட்சம் விவசாயிகளுடன் பேரணியாக சென்று டெல்லிக்கு அதிர்ச்சியை கொடுத்தவர். பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அவர்.
ஆனால் அவர் உயிரிழந்த பிறகு அந்த சங்கம் உடைந்து பல துண்டுகளாக சிதறிவிட்டன. அவரது மறைவுக்கு பிறகும் மகேந்திர சிங்குக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு ராகேஷுக்கு ஆச்சரியத்தை கொடுக்க அரசியலில் குதித்தார்.
அதன்படி 2007ஆம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ராகேஷ் தோல்வியடைந்தார். மனதை தளரவிடாத அவர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் டெபாசிட்டையே இழந்தார்.
இதனையடுத்து பாஜகவுக்கு ஆதரவாக 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பரப்புரை செய்தார். ஆனால் காலம் அவரை பாஜகவுக்கு எதிர் நிலையில் கொண்டு போய் நிறுத்தியது.
உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த ராகேஷ் திகைத் பாரத் கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்துக்கு செய்தித் தொடர்பாளராகவே இருந்தார்.
இந்த ஆண்டுகுடியரசு தினத்தின்போது டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி பெரும் வன்முறையில் முடிந்தது. அதைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் போராட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெளியேறினர்.வெளியேற மறுத்த விவசாயிகளை காவல் துறையினர் வெறியாட்டம் ஆடி வெளியேற்ற முயன்றது.
அப்போது ராகேஷ் வெளியிட்ட வீடியோவில் அவர் அழுதுகொண்டே, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் நான் தூக்கில் தொங்குவேன். விவசாயிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள்'” என வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து அவர் நாடு முழுவதும் அறியப்படும் முகமானார்.
இந்த வீடியோவை அடுத்து உத்தரப் பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பினர். அன்றிலிருந்து விவசாய போராட்டத்தின் முகமாக ராகேஷ் தெரிய தொடங்கினார்.
அதோடு மட்டுமின்றி சமீபத்தில் ஹரியானாவில் நடந்த இடைத்தேர்தலில், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ராகேஷ் பரப்புரை செய்தார். அவர் நினைத்தபடியே அத்தேர்தலில் பாஜக தோற்றது. இதனால் அவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.
மேலும் அவர் வட மாநில விவசாயிகளை ஒன்று திரட்டி கிசான் மகா பஞ்சாயத்துகளை நடத்துகிறார். கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகர் கல்லூரி மைதானத்தில் நடந்த கிசான் மகா பஞ்சாயத்தில் ஹரியானா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அதேபோல் வரும் நவம்பர் 22ஆம் தேதியுமொரு மகா பஞ்சாயத்து உத்தரப் பிரதேசம் தலைநகர் லக்னோவில் நடக்கும் என ராகேஷ் திகைத் அறிவித்திருக்கிறார்.
ஆனால் உ.பி. அரசு அதை தடுக்க முயன்றது. கொதித்தெழுந்த ராகேஷ், மத்திய அரசின் கருப்பு சட்டங்களையும், விவசாயிகள் விரோத அரசையும் அடக்கம் செய்ய வேண்டிய சவப்பெட்டியின் கடைசி ஆணி லக்னோ மகா பஞ்சாயத்து. அதனை தடுக்க நினைத்தால் பிரதமரும், உத்தரப் பிரதேச முதலமைச்சரும் எங்கும் கால் வைக்க முடியாது என்று எச்சரித்தார். இப்படி பல விஷயங்களில் விவசாய போராட்டத்திற்கு முன்னத்தி ஏர் என ராகேஷ் திகைத் திகழ்ந்தார்.
முன்னத்தி ஏர்தான் ஆனாலும் சர்ச்சை உண்டு
லக்கிம்பூர் போராட்டத்தின்போது விவசாயிகள் பாஜக எம்பியின் மகனால் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் உள்ளிட்ட பலருக்கு உத்தரப் பிரதேச அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் ராகேஷ் திகைத்துக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்தது. இதற்கிடையே படுகொலைக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜிஷ் மிஸ்ராவின் மகனை கைது செய்தால்தான் உடற்கூராய்வுக்கு அனுமதிப்போம் என்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் திட்டவட்டமாக இருந்தனர். ஆனால் ராகேஷ் திகைத் அவர்களை சந்தித்து பேசிய பிறகு உடற்கூராய்வுக்கு ஒத்துக்கொண்டனர்.
இதனால் ராகேஷ் திகைத் மீது விவசாயிகளில் ஒரு தரப்பினர் அதிருப்தியடைந்தனர். மேலும், உத்தரப் பிரதேச அரசுக்கும், விவசாயிகளுக்கு இடையே அவர் இடைத்தரகர் போல் செயல்பட்டுவிட்டார் என்ற சர்ச்சையும் எழுந்தது.
கான்ஸ்டபிளில் இருந்து விவசாயிகளின் ஹீரோவாக உயர்ந்திருக்கும் ராகேஷ் கடந்த செப்டம்பரில் நடந்த மகா பஞ்சாயத்தில் இப்படி பேசியிருந்தார்.
“இந்திய சுதந்திரப் போராட்டம் 90 ஆண்டுகள் நடைபெற்றது. இந்தப் போராட்டம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. நாடு விற்கப்படுவதை நாம் தடுக்க வேண்டும். எங்களின் உயிரே போனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்களை நிறுத்த மாட்டோம். இன்னும் எவ்வளவு நாள்கள் ஆனாலும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் போராட்டக் களத்தைவிட்டுச் செல்ல மாட்டோம்.
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம். விவசாயம் மட்டுமல்லாமல், தொழிலாளர்கள், இளைஞர்கள், வர்த்தகம் என்று அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும்”.
ஆம் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருமபப் பெற்றதன் மூலம் தங்களுக்கு ராகேஷ் திகைத் மூலம் சுதந்திரம் கிடைத்திருப்பதாகவே பல விவசாயிகள் கருதுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்