பண்டைய பாரம்பரியத்திலிருந்து உலகளாவிய புரட்சி வரை.. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றிய யோகா
உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் யோகா வளப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பண்டைய கலாச்சார பாரம்பரியமான 'யோகா' இன்று உலகளாவிய சின்னமாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளப்படுத்துகிறது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் மற்றும் உபநிடதங்களுடன் தொடங்கியது. அப்போது முனிவர்கள் தியானம் மற்றும் சுய விழிப்புணர்வு மூலம் வாழ்க்கையின் சமநிலையைக் கற்பித்தனர். இன்று, யோகா இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆரோக்கியம் மற்றும் அமைதியின் அடையாளமாக மாறியுள்ளது.
இந்தியாவில் யோகா பற்றிப் பேசும்போது, முதலில் நினைவுக்கு வருவது யோகா குரு என்று பிரபலமாக அறியப்படும் பாபா ராம்தேவின் பெயர்தான். இந்தியாவில் யோகாவை ஊக்குவிப்பதில் பாபா ராம்தேவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர், 1995இல் திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளையையும் 2006இல் பதஞ்சலி யோகபீடத்தையும் நிறுவி, யோகா மற்றும் ஆயுர்வேதத்தை மக்களிடம் கொண்டு சென்றார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் யோகா முகாம்கள் வழியாக லட்சக்கணக்கான மக்களுக்கு பிராணயாமா மற்றும் ஆசனங்களைக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
யோகாவை வலியுறுத்திய ராம்தேவ், மன அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பொதுவான உடல்நலப் பிரச்னைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் பாஸ்த்ரிகா, கபால்பதி மற்றும் அனுலோம்-விலோம் போன்ற நடைமுறைகளை பிரபலப்படுத்தினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 5,200 பேருடன் யோகா தினத்தைக் கொண்டாடினார். 2017 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் 300,000 பேருடன் உலக சாதனை படைத்தார். பாபா ராம்தேவின் முயற்சியின் மூலம், யோகா உலக அரங்கிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளது.
பதஞ்சலி மற்றும் இந்திய அரசின் முயற்சிகளைத் தொடர்ந்து, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை 2014ஆம் ஆண்டு, ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவித்ததன் மூலம், யோகா உலக அரங்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், யோகா முகாம்கள், பட்டறைகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் யோகா ஸ்டுடியோக்கள் மற்றும் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
யோகாவின் பிரபலத்திற்குக் காரணம் அதன் முழுமையான அணுகுமுறைதான். இது உடல் பயிற்சியை மட்டுமல்ல, மன அமைதியையும் உணர்ச்சி சமநிலையையும் வழங்குகிறது. ஆசனங்கள், பிராணயாமம் மற்றும் தியானம் மூலம், மன அழுத்தம், பதட்டம் மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து மக்கள் நிவாரணம் பெறுகிறார்கள்.
மன ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களை நிர்வகிப்பதில் யோகா பயனுள்ளதாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பும் விவரித்துள்ளது. குறிப்பாக, COVID-19 தொற்றுநோய் காலத்தில், ஆன்லைன் யோகா அமர்வுகள் வீட்டிலேயே உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க மக்களுக்கு உதவியது.
கலாச்சார மற்றும் புவியியல் எல்லைகளை இன்று யோகா தாண்டிவிட்டது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் கார்ப்பரேட் ஊழியர்கள் வரை அனைவரும் யோகாவை தங்கள் வழக்கத்தில் இணைத்து வருகின்றனர். இந்தியாவில் ஐயங்கார், பீகார் யோகா பள்ளி மற்றும் பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் யோகாவை நவீன வடிவத்தில் வழங்கியுள்ளன. இது இளைஞர்களிடையே பிரபலமாகியுள்ளது. யோகா சுற்றுலாவும் இந்தியாவை உலகளாவிய ஈர்ப்பாக மாற்றியுள்ளது. ரிஷிகேஷ் மற்றும் கோவா போன்ற இடங்கள் யோகா கற்றுக்கொள்பவர்களுக்கு புனித யாத்திரைத் தலங்களாக மாறி வருகின்றன.





















