குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
இந்திய குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அவர் கலந்து கொள்வார் என்றும் பிரெஞ்சு அதிபர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய குடியரசு தின விழாவுக்கு பிரான்ஸ் நாட்டின் தலைவர்களே அதிக முறை அழைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் அதிபர்:
தற்போது, 6ஆவது முறையாக பிரான்ஸ் நாட்டின் தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார். உண்மையில், இந்தாண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். ஆனால், தன்னால் இந்தியாவுக்கு பயணம் செய்ய முடியாது என பைடன் தெரிவிக்கவே, அவருக்கு பதிலாக பிரான்ஸ் அதிபர் அழைக்கப்பட்டார்.
இந்திய, பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான உறவு பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் கூட, பிரான்ஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதே மாதம், பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் (கடல்) ஜெட் விமானங்களை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ஜெட் விமானங்களை வாங்குவதற்கான இந்திய அரசின் டெண்டருக்கு பிரான்ஸ் ஏற்கனவே பதிலளித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட கடல்சார் போக்குவரத்தில் இரு தரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகின்றன.
குடியரசு தின சிறப்பு விருந்தினர்கள்:
ஒவ்வொரு ஆண்டும், இந்திய குடியரசு தின விழாவில் உலக தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர் யாரும் அழைக்கப்படவில்லை. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். 2018 ஆம் ஆண்டு, ஆசியான் நாடுகளின் தலைவர்களும் 2017 ஆம் ஆண்டு, அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அதே நேரத்தில், 2016 ஆம் ஆண்டு, அப்போதைய பிரெஞ்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே குடியரசு தின நிகழ்வை சிறப்பித்தார்.
கடந்த 1993ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த 1995ஆம் ஆண்டு, அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா பங்கேற்றார். 2010ஆம் ஆண்டு, தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக் கலந்து கொண்டார்.