சித்தராமையாவிற்கு செக்.. இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் செய்த காங்கிரஸ்..!
கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், வரும் மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
அரசியல் பரபரப்பு:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொடர் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முன்னதாக, முதல் கட்டமாக 124 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் இரண்டாவது கட்டமாக 42 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, 43 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
இரண்டு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு:
வருணா தொகுதியை தவிர்த்து கோலார் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், கோலார் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோலார் தொகுதியில் சித்தராமையாவுக்கு பதிலாக கோத்தூர் மஞ்சுநாத் களம் இறக்கப்பட்டுள்ளனார்.
பெங்களூர் தெற்கு தொகுதியில் ஆர்.கே. ரமேஷ், மங்களூர் தெற்கு தொகுதியில் ஜான் ரிச்சர்டு லோபோ, கிருஷ்ணராஜா தொகுதியில் எம்.கே. சோமசேகரா, காமராஜா தொகுதியில் ஹரிஷ் கவுடா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர்:
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் லட்சுமணன் சாவடி, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அத்தாணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, கல்வி மற்றும் வேலைகளில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு புதிய வகைப்படுத்தலை அறிமுகம் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
பா.ஜ.க. முயற்சி:
அதேபோல, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டையும் பாஜக அரசு ரத்து செய்தது. இந்த விவகாரமும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில், கவனிக்கதக்கது என்னவென்றால், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அது கர்நாடகாவில் செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான லிங்காயத், வோக்காலிகா ஆகிய பிரிவுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டதுதான். இந்த குறிப்பிட்ட சாதி பிரிவுகளின் வாக்குகளை பெறவே, பாஜக இந்த முடிவை எடுத்ததாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.