கள்ளத்துப்பாக்கியால் சுட்டு ரீல்ஸ்... முன்னாள் காங்கிரஸ் தலைவர் மீது சைபர் காவல்துறை வழக்குப் பதிவு
பஞ்சாபி பாடல்கள் பின்னணியில் ஒலிக்க இப்பெண்கள் வெட்கத்துடன் சுடும் ஐந்து வீடியோக்கள் கண்ணில் பட்ட நிலையில், தொடர்ந்து அவர்களது கணக்குகளை ஆராயப்பட்டன.
ஹரியானாவில் முன்னாள் பெண் காங்கிரஸ் தலைவர் ஒருவரும் பெண் வழக்கறிஞர் ஒருவரும் கள்ளத் துப்பாக்கிகளைக் கொண்டு பொது வெளியில் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், பல்வால் மாவட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் பெண் தலைவரும் பெண் வழக்கறிஞரும் கள்ளத் துப்பாக்கிகளைக் கொண்டு பொது வெளியில் சுட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து சைபர் பிரிவினர் முன்னதாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இச்சம்பவ குறித்துப் பேசிய சைபர் பிரிவின் தலைவர் வினோத் குமார், ”சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோத செயல்கள் மற்றும் அவதூறான கண்டண்ட்கள் கண்காணிப்பட்டு வருகின்றன.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி வழக்கம்போல் இன்ஸ்டாகிராமை ஆய்வு செய்தபோது கள்ளத் துப்பாக்கிகளை பயன்படுத்தும் 2 பெண்களின் வீடியோக்கள் கண்ணில் பட்டது.
பஞ்சாபி பாடல்கள் பின்னணியில் ஒலிக்க இப்பெண்கள் வெட்கத்துடன் சுடும் ஐந்து வீடியோக்கள் கண்ணில் பட்ட நிலையில், தொடர்ந்து அவர்களது கணக்குகளை ஆராயப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னதாக இப்பெண்கள் அடையாளம் காணப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பெண் தலைவரான சஞ்சல் அக்கா திஷா கவுதம், வழக்கறிஞர் பூனம் ராவ் என்பது தெரிய வந்தது.
முன்னதாக இதுகுறித்துப் பேசிய நகர தலைமை அதிகாரி ரேணுதேவி, இந்த வழக்கின் விசாரணை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் உரிய முறையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கள்ளத் துப்பாக்கி
முன்னதாக சென்னை, திருச்சி மாவட்டங்களில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த கள்ளத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து என்.ஐ.ஏ., விசாரணை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முன்னதாக உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் கார்மேகம் என்பவர், 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
சென்னையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய உரிமம் இல்லாத கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 4 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் பிரதீப், சென்னை நம்மாழ்வார்பேட்டை காவலர் பரமேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் நாகராஜன், சிவாவிடம் ஆகியோரிடம் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். உரிமம் இல்லாத துப்பாக்கிகள் சென்னை, கோவை, திருப்பூரைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.
இதை மாநில காவல் துறையினர் பாரபட்சமின்றி விசாரிக்க வாய்ப்பில்லை. சென்னை, திருச்சியில் சட்டவிரோதமாக உரிமம் இன்றி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கெனவே விசாரணையின்போது அரசு தரப்பு, 'வழக்குப் பதிந்து, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது' என தெரிவித்தது.
இந்த வழக்கை முன்னதாக விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, ”விசாரணையின் மேல் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு உள்துறை செயலர், டி.ஜி.பி., இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.