Adani: அதானி குழுமத்திற்கு வலுவான ஆதரவு கொடுக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்...! காரணம் என்ன?
"ஆஸ்திரேலியாவில் முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்புகளையும் செல்வத்தையும் உருவாக்கியதற்காக அதானி குழுமத்திற்கு பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன்"
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றி வெளியிட்ட ஆய்வறிக்கை இந்திய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை:
அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்திருந்தது.
இந்நிலையில், அதானி குழுமத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், "குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. ஏதாவது குற்றம் சாட்டப்பட்டதால், அது உண்மையாகிவிடாது. என் நினைவின்படி, குற்றம் நிரூபிக்கப்படும் வரை நீங்கள் நிரபராதி என்பதுதான் பொதுச் சட்டத்தின் கொள்கை.
அதானி குழுமத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்:
எனவே, குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருந்தால், ஒழுங்குமுறை ஆணையம் அதை ஆராயும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் காட்டிய நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்புகளையும் செல்வத்தையும் உருவாக்கியதற்காக அதானி குழுமத்திற்கு பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், அதானி எந்த கட்டணமும் செலுத்தாமல் இறக்குமதி செய்துள்ள ஆஸ்திரேலிய நிலக்கரியின் உதவியுடன் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு 24x7 மின்சாரத்தை உறுதி செய்வதில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் கவனம் ஈர்த்தது.
மத்திய குயின்ஸ்லாந்தில் அதானி சுரங்கத்தை மிகவும் ஆதரித்த ஒருவர் என்ற முறையில், 24x7 மின்சாரம் இல்லாமல் நவீன வாழ்க்கையை நீங்கள் கொண்டிருக்க முடியாது என்பதால், நாட்டின் மின்மயமாக்கலுக்கு உதவ அதானி நிலக்கரி இப்போது இந்தியாவிற்கு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதைத்தான் அதானி சுரங்கத்திலிருந்து ஆஸ்திரேலிய நிலக்கரி வழங்க உதவுகிறது.
அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகள் மற்றும் செல்வத்தை உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு ஆஸ்திரேலியனாக எனக்குத் தெரியும்" என்றார்.
முன்னதாக, இந்தியாவுக்கு வந்த டோனி அபோட் டெல்லியில் பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார்.
ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் வளர்ச்சி அடைய குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு மேற்கே 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள கார்மைக்கேல் சுரங்கமும் ரயில் திட்டமுமே காரணம். இது ஒரு வெப்ப நிலக்கரி சுரங்க ரயில் திட்டமாகும்.
இது கலிலி படுகையில் இருந்து இந்தியா உட்பட ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு நிலக்கரியை கொண்டு செல்கிறது. இந்த திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து மக்கள் வேலைவாய்ப்புகளை பெற்றனர்.