Karnataka Hijab Row | ''கவலையில்லை... எல்லோருமே உடன் இருக்கிறார்கள்'' - வைரல் பெண் முஸ்கான்
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தான் கவலைப்படவில்லை என்றும் எனக்கு துணையாக பலரும் இருப்பதாக வைரல் பெண் முஸ்கான் தெரிவித்துள்ளார்.
வைரல் பெண்..
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே உள்ளது. இன்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்ட ஒரு பிரிவு மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு அப்பெண்ணை முற்றுகையிட்டனர். பல ஆண்கள் தன்னை முற்றுகையிட்டு முழக்கமிட்ட போதும் பயமின்றி கல்லூரிக்குள் நுழைந்த அப்பெண் அல்லாஹ் அக்பர் என்று கைகளை உயர்த்தி, கோஷமிட்டார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் இன்று வைரலாகி வருகிறது. கூட்டத்தின் முழக்கத்துக்கு அச்சப்படாமல் பதில் குரல் கொடுத்த மாணவிக்கு பாராட்டுகள் என பலரும் பதிவிட்டு வருகின்றன. மதம் சார்ந்த முழக்கத்துக்கு பதில் முழக்கமா என்று ஒரு தரப்பினர் அந்த மாணவிக்கு எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வைரல் பெண் முஸ்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ''நான் எதற்கும் கவலைப்படவில்லை. எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே நான் வந்தேன். புர்கா அணிந்ததால் என்னை அனுமதிக்கவில்லை. என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் அல்லாஹு அக்பர் கூற ஆரம்பித்தேன். கல்லூரி பேராசியர்கள் என்னை பத்திரமாக அழைத்துச் சென்றனர். பலரும் எனக்கு துணையாக இருப்பதாக என்னிடம் கூறுகிறார்கள். எனக்கு கவலையில்லை. எனக்கு படிப்புத்தான் முக்கியம். அதை அவர்கள் கெடுக்கிறார்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா பதற்றம்...
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர 5 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று (பிப்.7) கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்படுவர். அவர்களுக்குக் கற்பித்தல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே உள்ளது.