ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், தற்கொலை செய்து கொண்ட அனைவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.
நிதிப் பிரச்னையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "நான்கு குடும்ப உறுப்பினர்கள். ஆண், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் ஆகியோர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
குடும்பத்தினர் நான்கு பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாரணாசிக்கு சென்றுள்ளனர். வாரணாசி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
விருந்தினர் மாளிகையில் இருந்து நேற்று காலி செய்திருக்க வேண்டும். ஆனால், வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே, பணியாளர் ஒருவர், ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது, 4 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்" என்றனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உடலை கைப்பற்றினர். தங்கியிருந்த அறையில் தெலுங்கில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதில், ஆந்திராவில் உள்ள ஒருவருடன் குடும்பத்துக்கு பணத் தகராறு இருந்ததாக எழுதப்பட்டுள்ளது.
அதேபோல, உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி நகரில் உள்ள ரயில்வே காலனியில் நடந்த மற்றொரு தற்கொலை சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ரயில்வேயில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "ரயில்வேயில் மருத்துவ அதிகாரியாக பணிபுரியும் கண் நிபுணர் டாக்டர் அருண் குமார், ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டார். அவர் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்தார். குற்றம் நடந்த இடத்தில் ஒரு சுத்தியல், ரத்தக் கறை மற்றும் போதை ஊசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
அருண் குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளின் சுயநினைவை இழக்க வைக்க மருந்துகளை வழங்கியுள்ளார். பின்னர், அவர்களின் தலையில் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டார்" என்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)