UP: மின்வெட்டு காரணமாக டார்ச் லைட்டில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ! - என்ன ஆனது ஜெனரேட்டர்?
நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் டார்ச் விளக்குகளின் கீழ் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மின்வெட்டு காரணமாக மருத்துவமனையில் மொபைல் டார்ச் மூலம் சிகிச்சை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்க்கிறது. அதன் எதிரொலியாக கடந்த சனிக்கிழமை இரவு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றில் , பெண் ஒருவர் அவசர நிலையில் ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்டார். உடனடியாக பரிசோதிக்க வேண்டிய நிலை . மின்சாரம் இல்லாததால் மருத்துவர்கள் மொபைல்போனில் இருக்கும் டார்ச் லைட்டை பயன்படுத்தி , அந்த பெண்ணை பரிசோதித்துள்ளனர். மருத்துவமனையில் ஜெனரேட்டர் உள்ளிட்ட தற்காலிக வசதிகள் எதுவும் இல்லை என தெரிகிறது. மருத்துவமனையில் காத்திருந்த நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் டார்ச் விளக்குகளின் கீழ் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி தீயாக பரவியதை தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் "மருத்துவமனையில் நாங்கள் பேக் அப்பிற்கு ஜெனரேட்டர்களை எப்போதுமே வைத்திருக்கிறோம் . ஆனால் அதற்கான பேட்டரிகளை நாங்கள் போட்டு வைத்திருப்பதில்லை.ஜெனரேட்டருக்கான பேட்டரிகளைப் பெறுவதில் 15-20 நிமிடங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால்தான் மொபைல் வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டியதாயிற்று" என விளக்கம் அளித்துள்ளார். பேட்டரியை எப்போதுமே சரிபார்ப்பதில்லையா ? ஏன் அவசரகால ஜெனரேட்டர்களில் பேட்டரிகள் பொருத்தப்படவில்லை என கேட்டதற்கு பதிலளித்த மருத்துவர் “ இந்த பகுதியில் பேட்டரிகள் திருடுபோகும் என்ற அச்சம் எப்போதும் உள்ளது. அதனால்தான் பேட்டரிகளை அகற்றி வைத்துவிடுகின்றனர் “ என்றார். இந்த சம்பவம் குறித்து மாநில அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் மின்சாரத்திற்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் பல மாநிலங்களில் மின்சார தேவையை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்களில் மின்வெட்டை மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு இருக்கதான் செய்கிறது. மொபைல் டார்ச்சில் சிகிச்சை அளிப்பது இது முதல்முறை அல்ல. இதே போல பல சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் கூட பீகார் மாநிலம் சசராம் மாவட்ட அரசு மருத்துவமனையில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.ருத்துவமனையில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் அவசரநிலை கருதி செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர் பிரிஜேஷ் குமார் தெரிவித்திருந்தார்.இந்தியாவில் சுகாதார வசதிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா அலைக்கு பிறகு இது வேகமெடுத்துள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும் மருத்துவமனையில் இப்படியான அவலங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்