Jaishankar: 'இந்திராகாந்தி என் தந்தையை செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்' - மனம் திறந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஜெய்சங்கர். இவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சிறந்த அதிகாரி:
“நான் சிறந்த வெளியுறவுத்துறை அதிகாரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். என் மனதில் சிறந்தது என்றால் அது வெளியுறவுத்துறை செயலாளராக முடிவதே என்று இருந்தது. எனது வீட்டிலும் அது இருந்தது. ஆனால், அதை அழுத்தம் என்று கூற முடியாது.
ஒரு அதிகாரியாக இருந்த எனது தந்தை செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால், அவர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஜனதா ஆட்சியில் 1979ம் ஆண்டு செயலாளரான அவர் மிகவும் இளைய செயலாளர் ஆவார். ஒரு வேளை அதுகூட சிக்கலை ஏற்படுத்தியிருக்கலாம். எனக்கு அது பற்றி தெரியவில்லை.
இந்திராகாந்தியால் நீக்கம்:
1980ம் ஆண்டு இந்திராகாந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டபோது, முதலில் நீக்கப்பட்ட செயலாளர் எனது தந்தைதான். பாதுகாப்பு விவகாரங்களில் அவர் மிகவும் புத்திசாலியான நபர் ஆவார். அதற்கு பிறகு அவர் செயலாளராக ஆகவே இல்லை. ராஜீவ்காந்தி காலத்தில் அவரை விட இளையவர் ஒருவர் செயலாளராக பதவியேற்றார். அது பற்றி நாங்கள் அரிதாகவே பேசினோம். ஆனால், எனது அண்ணன் செயலாளராக பதவியேற்றபோது அவர் மிகவும் பெருமைப்பட்டார்.
கிரேடு 1 அதிகாரியாக பதவி பெற்றபோது அதாவது தூதரைப் போன்ற பொறுப்பை அடைந்தேன். ஆனால், செயலாளராக ஆகவில்லை. எனது தந்தை காலமான பிறகு நான் செயலாளரானேன். அப்போது, செயலாளர் ஆவதுதான் எங்களது இலக்காக இருந்தது. பிரதமர் நரேந்திரமோடி தனது அமைச்சரவையில் ஒரு அங்கமாக இருக்க அழைப்பு விடுத்தபோது நான் நாடாளுமன்ற உறுப்பினராக கூட இல்லை. பின்னர், ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுமாக நடந்தது. எங்கள் கட்சியிலும், மற்ற கட்சியிலும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
யார் இந்த ஜெய்சங்கர்?
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவர். அவர் 1955ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி பிறந்தவர். இவரது தந்தை கே.சுப்ரமணியம் – தாய் சுலோச்சனா. இவரது இரண்டு சகோதரர் சஞ்சய் சுப்ரமணியம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள விமானப்படை பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். டெல்லியில் கல்லூரியை முடித்தவர் ஜே.என்,யூ, பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பை முடித்தார். ஐ.எஃப்.எஸ். அதிகாரியாக 1977ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். வெளியுறவுத்துறையில் சிறந்த அனுபவம் வாய்ந்த ஜெய்சங்கர் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றிய அனுபவம் உடையவர்.
2015ம் ஆண்டில் மோடி அரசில் வெளியுறவுத்துறை செயலாளராக பொறுப்பு வகித்தார். பின்னர், அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பை மோடி வழங்கினார். 2019ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பேற்றார்.
மேலும் படிக்க:Robotic Elephant: 11 அடி உயரம்.. 800 கிலோ எடை.. கேரள கோயிலில் சேவையாற்ற வருகிறது ரோபோடிக் யானை
மேலும் படிக்க: Roopa IPS vs Rohini IAS: பொதுவெளியில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ் - ஐஏஎஸ் அதிகாரிகள்: அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!