என்னது? மின்சார வாகனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழா? கேரள போலீஸ் போட்ட அபராதம்!
ஒரு படத்தில் விவேக் காமெடி வரும். இருச்சக்கர வாகனத்தில் வரும் ஒரு நபர் எல்லா பேப்பர்ஸும் சரியாக வைத்திருந்ததால் காண்டாகும் காவலர் (விவேக்) ஏழரை போட்டுக்காட்டச் சொல்வார்.
ஒரு படத்தில் விவேக் காமெடி வரும். இருச்சக்கர வாகனத்தில் வரும் ஒரு நபர் எல்லா பேப்பர்ஸும் சரியாக வைத்திருந்ததால் காண்டாகும் காவலர் (விவேக்) ஏழரை போட்டுக்காட்டச் சொல்வார். இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்று நாமும் சிரித்துவைத்துவிட்டு வந்தோம். ஆனால் அதற்கு நிகராக ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. இ ஸ்கூட்டரில் சென்றவரிடம் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை எனக் கூறி அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்துக் காவலர்கள்.
எங்கு நடந்தது?
இந்தச் சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலாஞ்சேரி என்ற பகுதியில் நடந்துள்ளது. பியுசிசி அதாவது பொல்யூஷன் அண்டர் கன்ட்ரோல் சர்டிஃபிகேட் எனப்படும் சான்றிதழுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத ரசீதில் ரூ.250 அபராதத் தொகையாக அச்சிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 213 உட்பிரிவு 5 ஈ யின் கீழ் அந்த நபருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இ வாகனம் என்பதே மாசில்லா வாகனம் பட்டியலில் இருக்கிறது. அப்படியிருக்க அதற்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் கேட்டு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளது நகைமுரணாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.இதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.
எதிர்காலமாகும் இ வாகனம்:
2015ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 197நாடுகள் எதிர்காலத்தில் எரிபொருளுக்கு மாற்றான மின் வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்தன. அதன்படி 2030க்குள் நூறு சதவீத மின்சார வாகனங்களுக்கு மாறுதல் எனும் இலக்கு அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீக்கு ஒரு மின்னூட்டு நிலையம் அமைக்கவும் திட்டம் உள்ளது.
ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரை மின் வாகனங்கள் விற்பனைக்கு உள்ளன. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 70 முதல் 95 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. இலகுவான வாகனம் வண்டி ஓட்டவும் எளிதாய் இருக்கிறது. சர்வீஸ் இல்லை, இன்சூரன்ஸ் இல்லை. பயன்பாட்டினைப் பொறுத்து பேட்டரி மாற்ற வேண்டி இருக்கும். இரு ஆண்டு அல்லது மூன்றாண்டுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றும் சூழல் வரும். ரிசார்ஜபிள் பேட்டரி லித்தியத்தால் ஆனது என்பதால் நான்கு முதல் ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். 4 யூனிட் இருந்தால் போதும் 100% சார்ஜ் ஏறிவிடும்.வீட்டில் உள்ள ப்ளக் பாய்ண்டில் சார்ஜ் ஏற்றலாம். Fast charging பாயிண்டில் செய்தால் சார்ஜ் செய்யும் நேரம் இன்னும் குறையலாம். 40கி.மீ முதல் 45கி.மீ,50-65கி.மீ வேகத்தில் செல்லும். இழுவைத் திறன் அதிகம் உள்ள வண்டிகளும் இருக்கிறது.
இப்படியாக பல எதிர்பார்ப்புகளுடன் இந்தியா இ வாகனங்களை நோக்கி முன்னேறி வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இ வாகன விபத்துகள் நடந்தாலும் கூட அதை சரிசெய்யவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இ வாகனங்களை கைவிடுவதாக இல்லை. டெஸ்லாவின் எலான் மஸ்க் போன்றோரும் இ வாகனப் பாய்ச்சலை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் இ வாகனத்துக்கு ஃபைன் போட்டு காமெடி ஷோ நடத்தியுள்ளது காவல் துறை. இது போலவே கடந்த ஜூலையில் கொச்சியைச் சேர்ந்த நபருக்கு வாகனத்தில் போதிய அளவு பெட்ரோல் இல்லாமல் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அப்போது போக்குவரத்துக் காவல்துறையே தலையிட்டு இல்லை அது எழுத்துப் பிழையால் நேர்ந்த தவறு என்று கூறியது.