Bengaluru Metro: மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுப்பு! பொளந்து கட்டிய நெட்டிசன்கள்!
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவரின் ஆடை அசுத்தமாக இருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிக்க ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 'நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுப்பு:
இந்த நிலையில், ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவரின் (விவசாயி) ஆடைகள் அசுத்தமாக இருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிக்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் இணையத்தில் பேசும் பெருளாகி மாறியது. ராஜாஜி நகர் ரயில் நிலையத்தில் வெள்ளைச் சட்டை அணிந்து, தலையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு விவசாயி வந்திருந்தார்.
பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு ரயில் ஏறுவதற்கு நுழைவு கதவு பக்கம் வந்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் அசுத்தமான ஆடை அணிந்திருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிப்பதற்கு தடுத்து நிறுத்தியுள்ளனர். பயணிச்சீட்டு எடுத்தும் விவசாயியை பயணம் மேற்கொள்ள ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால், பக்கத்தில் இருந்த சக பயணிகள் ஊழியர்களை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.
UNBELIEVABLE..! Is metro only for VIPs? Is there a dress code to use Metro?
— Deepak N (@DeepakN172) February 24, 2024
I appreciate actions of Karthik C Airani, who fought for the right of a farmer at Rajajinagar metro station. We need more such heroes everywhere. @OfficialBMRCL train your officials properly. #metro pic.twitter.com/7SAZdlgAEH
”நம்ப முடியவில்லை. மெட்ரோ ரயில் விஐபிகளுக்கு மட்டும்தானா? மெட்ரோவைப் பயன்படுத்த ஆடைக் கட்டுப்பாடு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர். அந்த வீடியோவில், வெள்ளை நிற சட்டை அணிந்து, தலையில் ஒரு பையை வைத்து கொண்டு ரயில் நிலையத்தில் இருக்கும் விவசாயியை, அங்கிருக்கும் ஊழியர்கள் உள்ளே செல்ல மறுக்கின்றனர்.
மன்னிப்பு கேட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம்:
இதனை பார்த்த சக பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நீண்ட நேரம் ஊழியர்கள் ரயில் ஏற விடாமல் விவசாயியை தடுத்துள்ளனர். இதற்காக சக பயணிகளும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனை பார்த்துக் கொண்டு விவசாயி அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார்.
சக பயணிகள் கண்டித்ததால், விவசாயிக்கு ரயிலில் பயணிக்க அனுமதி கிடைத்தது. இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறுகையில், ”நம்ம மெட்ரோ பொதுப் போக்குவரத்துக்கு உள்ளடக்கியது. ராஜாஜிநகர் சம்பவம் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பயணி ராஜாஜி நகரில் இருந்து மெஜஸ்டிக் வரை நம்ம மெட்ரோவில் பயணித்ததை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்துகிறது. நடந்த சம்பவத்திற்கு மீண்டும் வருந்துகிறோம்" என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.