ED Vs Anil Ambani: சிக்கலில் அனில் அம்பானி; ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி - லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய ED
3,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக அனில் அம்பானி உள்ள நிலையில், ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அவருக்கும், அவரது நிறுவன அதிகாரிகளுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது அவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லுக்அவுட் நோட்டீஸ் வழங்கிய அமலாக்கத்துறை
கடந்த 24-ம் தேதி ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனைகளை நடத்தினர். 3 நாட்கள் நீடித்த இந்த சோதனையில், அனில் அம்பானிக்கு வேண்டப்பட்ட 25 பேரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், சோதனையின்போது, அனில் அம்பானிக்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
தற்போது ரெய்டு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக, அனில் அம்பானியை வரும் 5-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவரோடு, அவரது நிறுவன அதிகாரிகள் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அன்று அனில் அம்பானி கைது செய்யப்படுவாரோ என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வழக்கு தொடரப்படுவதை தவிர்க்க, அனில் அம்பானியோ, அவரது நிறுவன அதிகாரிகளோ வெளி நாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கும் இது நோட்டீஸ் விநியோகிக்கப்படுகிறது, மேலும், அத்தகைய அறிவிப்புகள் வழங்கப்பட்ட நபர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றால் அவர்களைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு என்ன.?
யெஸ் வங்கியில் 3,000 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக, தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2017-19-ம் ஆண்டுகளில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இந்த கடனை வாங்கியுள்ளது. கடனை வாங்குவதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தது அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்தது. இதையடுத்து, கடந்த வாரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இம்மோசடி தொடர்பாக நாடு முழுவதும் சோதனைகளை நடத்தினர். அந்த ரெய்டில், அனில் அம்பானிக்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விசாரணையில், ரிலையன்ஸ் குழும நிர்வாகம், கடனுக்காக கொடுத்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில், யெஸ் வங்கி அதிகாரிகளால் புதிய கடன் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கடனை கொடுக்கும் முன்பே, வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்ததான் அமலாக்கத்துறை தற்போது மோசடியில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.





















