ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அமலாக்கத் துறை பறிமுதல் செய்தவற்றில், 18 சொத்துக்கள், நிலையான வைப்புத்தொகைகள், வங்கி இருப்புகள் மற்றும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலிடப்படாத முதலீடுகள் ஆகியவை அடங்கும்.

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL), ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) மற்றும் யெஸ் வங்கி தொடர்பான வங்கி மோசடி வழக்குகளில் தொடர்புடைய குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம்(ED) பறிமுதல் செய்துள்ளது.
எந்தெந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.?
அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், 18 சொத்துக்கள், நிலையான வைப்புத் தொகைகள், வங்கி இருப்புத் தொகைகள் மற்றும் பட்டியலிடப்படாத முதலீடுகள் ஆகியவை அடங்கும். மேலும், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் 7 சொத்துக்கள், ரிலையன்ஸ் பவர் லிமிடெட்டின் 2 சொத்துக்கள் மற்றும் ரிலையன்ஸ் வேல்யூ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 சொத்துக்களும் அடங்கும்.
ED கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட சொத்துக்கள் எவை.?
இவற்றுடன் கூடுதலாக, ரிலையன்ஸ் வேல்யூ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் வென்ச்சர் அசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஃபை மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆதார் பிராப்பர்ட்டி கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் மற்றும் கேம்சா இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் முதலீடுகள் அமலாக்கத் துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
ரூ.10,000 கோடியை தாண்டிய மொத்த பறிமுதல்கள்
அமலாக்கத் துறையால் தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு முன்னர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், RCFL மற்றும் RHFL தொடர்பான முந்தைய மோசடி வழக்குகளில் 8,997 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியிருந்தது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுடன் சேர்த்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு 10,117 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன.?
ED அளித்துள்ள தகவல்களின்படி, நிதி விசாரணையானது RCOM, RHFL, RCFL, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் உள்ளிட்ட பல ரிலையன்ஸ் ADA குழும நிறுவனங்களால் பொதுப் பணம் மோசடியாகத் திருப்பிவிடப்பட்டது அம்பலமாகியுள்ளது.
2017 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், யெஸ் வங்கி RHFL பத்திரங்களில் 2,965 கோடி ரூபாயும், RCFL பத்திரங்களில் 2,045 கோடி ரூபாயும் முதலீடுகளை செய்துள்ளன. பின்னர் இவை செயல்படாத சொத்துகளாக மாறி, 1,353.50 கோடி(RHFL) மற்றும் 1,984 கோடி(RCFL) நிலுவையில் உள்ளன.
அதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில், 11,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொது நிதி, குழுமத்திற்கு வெவ்வேறு வழிகளில் சென்றடைந்தது தெரியவந்தது. செபியின்(SEBI) விதிமுறைகளுடனான முரண்பாடுகளால், அனில் அம்பானி குழும நிதி நிறுவனங்களை நேரடியாக ஆதரிப்பதற்கு, ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், நிதி, மறைமுகமாக யெஸ் வங்கி வழியாக செலுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டது.
மேலும், 2010 மற்றும் 2012-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்திய மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட 40,185 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை, RCOM மற்றும் குழு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியதாகக் கூறும் CBI FIR-ன் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளையும் ED விசாரித்து வருகிறது. குறைந்தது 9 வங்கிகள் இந்த கணக்குகள் மோசடியானவை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















