”மாட்டுக்கறி சாப்பிடுபவர்களும், இந்துக்களும் ஒன்றல்ல” - விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி..!
லவ் ஜிகாத் நடக்கிறது. வாக்குவங்கி அரசியலை கைவிட்டு, இந்து மகள்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் என்றார்
மாட்டிறைச்சி உண்பவர்களின் மரபணு, இந்துக்களின் மரபணுக்களோடு ஒருபோதும் பொருந்தாது என விஸ்வ இந்து பரிஷத்தின்(விஎச்பி) தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி தெரிவித்தார்.
இந்தியர்கள் அனைவருமே ஒரே மரபணுவைக் கொண்டவர்கள் தான். இந்துக்களும், முஸ்லிம்களும் வெவ்வேறு குழுவினர் இல்லை என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இவ்வாறு பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,“ஒருவேளை, அனைத்து இந்தியர்களும் ஒரே மரபணுவை பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், மாட்டிறைச்சி உண்பவர்களின் மரபணுக்களை, இந்துக்களில் ஒருபோதும் காணமுடியாது" என்று தெரிவித்தார்.
நாட்டின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசிய அவர், "இரண்டு குழந்தைகள் மேல் பெற்றெடுக்கும் பெற்றோர்கள் அரசு நலஉதவித் திட்டங்கள் பெற தகுதியற்றவர்களாக அறிவிக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமையும் பறிக்கப்பட வேண்டும். இதை, நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார். "மனைவிகள் எத்தனை இருந்தாலும் பரவாயில்லை, இரண்டு குழந்தைகள் மட்டுமே நீங்கள் பெற்றெடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், ராஜஸ்தானில் லவ் ஜிஹாத் நடக்கிறது, ராஜஸ்தானிய பெண்கள் ஏமாற்றப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். வாக்குவங்கி அரசியலை கைவிட்டு, இந்து மகள்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை விமர்சித்தார்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்துக்கு அரசு நலத்திட்டங்கள் கிடையாது - உத்தரபிரதேச அரசு
முன்னதாக, ஆர்எஸ்எஸ்-ன் கிளை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "40,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அனைவரும் ஒரே மூதாதையரின் வழிவந்தவர்கள் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்துக்களும், முஸ்லிம்களும் இரு வெவ்வேறு குழுவினர் அல்ல. இந்தியர்கள் அனைவருக்குமே ஒரே டிஎன்ஏதான். இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், ஏற்கெனவே அவர்கள் ஒன்றிணைந்துதான் உள்ளனர். இந்துக்களோ முஸ்லிம்களோ யாரும் தனித்தனியாக ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தியர்களாக ஒன்றிணைந்து மட்டும்தான் ஓங்கிநிற்க முடியும். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என ஏதேனும் ஒரு இந்து கூறினால், அவர் இந்துவாகவே இருக்க முடியாது.
பசு மாடு நிச்சயமாக ஒரு புனிதமான விலங்குதான். ஆனால், பசுக்காவலர்கள் என்ற பெயரில் சக மனிதர்களைத் தாக்குபவர்கள் இந்துத்துவா கொள்கைக்கு எதிரானவர்கள். அதேபோல், சில இடங்களில் பசுவதைக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக போலியாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்டம் அத்தகையோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பலமதங்களை உள்ளடக்கிய சமுதாயமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல் (2022) அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தல், ஆளும் பாஜக அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, மதம், சாதி, இனம் அடிப்படையிலான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிக்கக் கூடும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.