Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாட்டில் 500 ரூபாய் நோட்டுக்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதலமைச்சராக பதவி வகிப்பவர் சந்திரபாபு நாயுடு. இவரது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடனே தற்போது மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மகாநாடு நடந்து வருகிறது.
500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்:
நிகழ்ச்சியின் முதல் நாள் இன்று பங்கேற்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசு 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த காலத்தில் அவர் நாட்டில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் மத்திய அரசுக்கு 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பெரிய மதிப்புள்ள நோட்டுக்களை அழித்தால் மட்டுமே கருப்பு பணப்புழக்கத்தை தடுக்க முடியும் என்று சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம்:
இது அரசியலுக்கும் பயன் அளிக்கும். அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் நிதியை வழங்க முடியும். புழக்கத்தில் உள்ள பெரிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை நீக்குவது ஏராளமான நன்மைகளைத் தரும். தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் தூய்மையான அரசியலையே செய்கிறது. கருப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட அனுபவம் கொண்ட அரசியல் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கு பலரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தாலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் அதிருப்தி:
மேலும், சந்திரபாபு நாயுடு இந்த கூட்டத்தில் இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ, அதையே நாளை நாடே நினைக்கும் என்றும் நம்பிக்கையுடன் பேசினார். இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி பெரிய மதிப்புள்ள ரூபாய் 1000 மற்று்ம் ரூபாய் 500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அவரது அறிவிப்பால் கருப்பு பணம் முற்றிலும் அழியும் என்று அரசு கருத்து தெரிவித்திருந்தாலும், நாடு முழுவதும் இருந்த கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.
சமீபகாலமாக சில ஆண்டுகளில் நாட்டு மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அதிகளவு மாறியிருந்தாலும், பணமாக பயன்படுத்துவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.





















