Atishi Marlena Singh: ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பு; நாட்டின் மிக இளம் முதலமைச்சர்- யார் இந்த அதிஷி சிங்?
Delhi new CM Atishi Marlena: அதிஷியின் பெற்றோர், அவருக்கு மர்லெனா சிங் என்று பெயர் சூட்டினர். இது மார்க்ஸ், லெனின் என்ற பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
Who is Atishi Marlena? டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங், நாட்டின் இள வயது முதலமைச்சராக உள்ளார். அவருக்கு வயது 43.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினானா செய்ய உள்ள நிலையில், அங்கு பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. இந்த கூட்டத்தில், அர்விந்த் கேஜ்ரிவால் அதிஷியின் பெயரை முதலமைச்சராக்க முன்மொழிந்துள்ளார். இதையடுத்து கல்வித்துறை அமைச்சரான அதிஷி சிங், கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து நாட்டிலேயே மிக இளமையான முதலமைச்சர் என்ற பெருமைக்கு அதிஷி சொந்தக்காரர் ஆக உள்ளார்.
யார் இந்த அதிஷி? பார்க்கலாம்.
பஞ்சாபி பெற்றோருக்கு 1981ஆம் ஆண்டு பிறந்தவர் அதிஷி. டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்களான அதிஷியின் பெற்றோர், அவருக்கு மர்லெனா சிங் என்று பெயர் சூட்டினர். இது மார்க்ஸ், லெனின் என்ற பெயர்களில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. டெல்லியில் பள்ளி, கல்லூரிப் படிப்பைப் படித்த அதிஷி, லண்டனில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி முடித்தார்.
அரசியல் வாழ்க்கை
2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார். தொடர்ந்து டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவின் ஆலோசகராகப் பணியாற்றினார் அதிஷி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், கிழக்கு டெல்லி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2020ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு, கல்கஜி தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தார். தொடர்ந்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்த பிறகு, கேபினட் அமைச்சரவையில் நுழைந்தார்.
நாட்டின் இள வயது முதல்வர்
தொடர்ந்து டெல்லியின் கல்வி, பொதுப் பணித்துறை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தற்போது டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அதிஷியின் வயது 43 என்பதால், நாட்டின் இள வயது முதல்வர், 4ஆவது பெண் முதல்வர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகி உள்ளார்.
முன்னதாக அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பேமா காண்டு, தனது 45 வயதில் நாட்டின் இள வயது முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருந்தார். அவரின் சாதனையை அதிஷி தற்போது முறியடித்து உள்ளார்.