Cracker Ban : அய்யய்யோ..! டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை..! விற்றால் 3 ஆண்டு சிறை..
டெல்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகளையும், பட்டாசுகளையும் போட்டி போட்டு வாங்கிக்கொண்டு வருகின்றனர். நாட்டிலே மிகவும் மோசமான நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வர உள்ளதால் டெல்லியில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினால் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லியில் தீபாவளி பண்டிகையை தினத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டள்ளது. டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும்.
டெல்லியில் பட்டாசு தயாரித்தல், பட்டாசுகளை விற்பனை செய்தல் மற்றும் பட்டாசுகளை வைத்திருந்தாலும் தண்டனைக்குரிய விஷயம் ஆகும். அவ்வாறு பிடிபட்டால் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சட்டப்பிரிவு 9 பியின் கீழ் விதிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு 2023ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை முழுமையான தடை செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது.
பட்டாசு விற்பனை, பட்டாசு வெடிப்பதை தடுப்பதை கண்காணிப்பதற்காக 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆணையர் தலைமையில் 210 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் சார்பில் 165 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது வரை பட்டாசு விவகாரத்தில் விதிகளை மீறியதாக 188 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முறைகேடு...பகீர் ஆதாரங்கள்...சசி தரூர் குற்றச்சாட்டு...என்ன நடந்தது?
மேலும் படிக்க : Mallikarjuna Kharge: கொள்கைகளை நெஞ்சில் ஏந்தியவர்...பக்கவான காங்கிரஸ்காரர்...யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?