"மன்னிச்சிடுங்க.. என்னால முடியல" JEE தேர்வில் தோல்வி.. 17 வயது மாணவி தற்கொலை.. கடிதத்தில் உருக்கம்!
JEE தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனதற்காக தன்னை மன்னிக்கும்படி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
JEE தேர்வில் தோல்வி அடைந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JEE தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனதற்காக தன்னை மன்னிக்கும்படி தனது பெற்றோருக்கு அவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்ஸ்), முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) என்று 2 கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது.
JEE தேர்வில் தோல்வி அடைந்த 17 வயது மாணவி:
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஜேஇஇ தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் டெல்லியில் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக தன்னை மன்னிக்கும்படி பெற்றோருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லியின் ஜாமியா நகரில் இந்த மாணவி வசித்து வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "நேற்று, 11:25 மணியளவில், ஓக்லா பிரதான சந்தையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 7வது மாடியின் கூரையில் இருந்து குதித்த 17 வயது சிறுமி பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
12ம் வகுப்பை முடித்துவிட்டு ஜேஇஇக்கு அவர் தயாராகிக்கொண்டிருந்தார். மன அழுத்தம், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது போன்ற காரணங்களை கூறி தற்கொலை கடிதம் எழுதியுள்ளார்" என்றார்.
தொடரும் தற்கொலைகள்:
டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர், கடந்த செவ்வாய்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இம்மாதிரியான தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக நீட் தேர்வில் வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு தற்கொலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.