Arvind Kejriwal: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! டெல்லி அரசியலில் புது திருப்பம்!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யபப்பட்ட வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. கைது செய்த இரண்டு வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.
மதுபான முறைகேடு வழக்கு:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்த மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாக கைது செய்யப்பட்டார்.
டெல்லியையே அதிர வைத்த இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அவரை கைது செய்தது. இதையடுத்து, இதே வழக்கில் சி.பி.ஐ.யும் அவரை ஜூன் 26ம் தேதி கைது செய்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.
சிறையில் இருந்து வெளிவரும் அரவிந்த் கெஜ்ரிவால்:
இந்த சூழலிலே, ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்சல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அமலாக்கத்துறை வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்துள்ள நிலையில், தற்போது சி.பி.ஐ. வழக்கிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைத்ததால் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்ததை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கு கடந்த 22 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவரை நீண்ட இடைவேளைக்கு பிறகே அவரை கைது செய்தது ஏன்? என்றும், இதில் உள்நோக்கம் உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.க்கு பல சரமாரி கேள்விகளை எழுப்பியது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியில் வந்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.