(Source: ECI/ABP News/ABP Majha)
டெல்லி பயங்கரம்.. இழுத்துச்செல்லப்பட்ட பெண் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய இரண்டு மர்ம நபர்கள் யார்...?
"கைது செய்யப்பட்ட ஐந்து பேரைத் தவிர மேலும் இருவர் இதில் ஈடுபட்டுள்ளனர். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. குற்றத்தை செய்தவர்களை குற்றத்தில் இருந்து தப்பி வைக்க மற்றவர்கள் முயற்சித்துள்ளனர்"
டெல்லியில் 20 வயது இளம்பெண் கொடூர விபத்தில் சிக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பெண் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது ஒருவர் காரை மோதி விபத்துக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.
பிறகு, அந்த பெண் காரின் அடியில் சிக்கிய நிலையில், கிட்டத்தட்ட 13 கீமீ தூரத்திற்கு அவர் இழுத்து செல்லப்பட்டார். நிர்வாண நிலையில் உடலில் பல காயங்களுடன் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
காரின் அடியில் அந்த பெண் சிக்கி இழுத்து செல்லப்பட்டதில் அவரின் ஆடைகள் கிழிந்திருக்கின்றன. சுல்தான்பூரியில் இளம்பெண்ணின் இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது.
அங்கிருந்து கஞ்சாபுரா வரை அவர் இழுத்து செல்லப்பட்டுள்ளார். அங்குதான், ஒரு நபர், காரின் அடியில் பெண் சிக்கி இருந்ததை கண்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய 5 நபர்கள் அந்த சமயத்தில் மது அருந்தியது பின்னர் தெரிய வந்தது. அவர்கள் 5 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொடூர விபத்தில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "விபத்தில் ஈடுபட்டது காரின் உரிமையாளரான அசுதோஷ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரரான அங்குஷ் ஆவர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்"
தொடர்ந்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி சாகர்ப்ரீத் ஹூடா, "கைது செய்யப்பட்ட ஐந்து பேரைத் தவிர மேலும் இருவர் இதில் ஈடுபட்டுள்ளனர். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. குற்றத்தை செய்தவர்களை குற்றத்தில் இருந்து தப்பி வைக்க மற்றவர்கள் முயற்சித்துள்ளனர்.
தீபக் கண்ணா, மனோஜ் மிட்டல், அமித் கண்ணா, கிரிஷன் மற்றும் மிதுன் ஆகியோர் சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அமித் கண்ணா தான் காரை ஓட்டினார் என்றும், தீபக் கண்ணா அல்ல என்றும் தெரியவந்துள்ளது. அமித்திடம் ஓட்டுநர் உரிமம் இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் முரண்படுவது தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் முரண்படுவது தெரிகிறது. குற்றம்சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை மறைக்க சதி செய்தனர். அஞ்சலியின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது அவர்களுக்குத் தெரியும். இது ஒரு பயங்கரமான சம்பவம், நாங்கள் ஆதாரங்களை சேகரிக்க முயற்சிக்கிறோம், அதனால் அஞ்சலிக்கு நீதி கிடைக்கும்" என்றார்.
புத்தாண்டு அன்று இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்திலேயே நொய்டாவில் இதேபோன்ற விபத்து அரங்கேறியதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.