(Source: ECI/ABP News/ABP Majha)
டார்கெட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. அலுவலகத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மர்ம நபர்கள்..! நடந்தது என்ன?
இன்னும், கொலைகாரர்கள் இருவரும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் நடந்த உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள சுரேந்திர மதியாலா மர்ம நபர்கள் இருவரால் அவரின் அலுவலகத்திலேயே சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டார்கெட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி:
சம்பவத்தை விவரித்த காவல்துறை தரப்பு, "மதியாலாவும் அவரது மருமகனும் இரவு 7:30 மணியளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, முகத்தை மூடிக்கொண்டு இரண்டு பேர், துவாரகாவில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் நுழைந்தனர். மதியாலாவை சரமாரியாக தாக்கினர். பின்னர், நான்கு முதல் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இன்னும், கொலைகாரர்கள் இருவரும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் நடந்த உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மொத்தம் மூன்று பேர். மதியாலாவைக் கொல்ல இருவர் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்தார்.
குற்றத்தை செய்த பின்னர், மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர்" என தெரிவித்தது. இதுகுறித்து மதியாலாவின் மகன் கூறுகையில், "தந்தைக்கு யாருடனும் பகை இல்லை. கொலையில் ஈடுபட்டவர்களை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
துப்பாக்கியால் சுட்டு கொலை:
மதியாலா கொலை வழக்கில் யார் மீதும் சந்தேகம் இல்லை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட விதம், அவரது கொலைக்குப் பின்னால் தனிப்பட்ட பழிவாங்கல் இருக்கலாம் என்று காவல்துறை நம்புவதற்கு வழிவகுத்துள்ளது. மதியாலாவுக்கு சிலருடன் சொத்து தகராறு இருந்ததாகவும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து துவாரகா துணை போலீஸ் கமிஷனர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், "கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூவரை கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்துள்ளது. குற்றம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் தடயங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
குற்றங்கள் அதிகரிப்பு:
சமீப காலமாகவே, டெல்லியில் வன்முறை செயல்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்க காலமான 2020ஆம் ஆண்டில், கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கடந்த 2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த குற்றங்களை 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அது 28% அதிகரித்துள்ளது. அதாவது 2019ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில், 386 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020ல் இந்த எண்ணிக்கை 488 என அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 66,46,285. இதில் இந்திய தண்டனை சட்டப்பிரிவான ஐ.பி.சி.யின் கீழ் 42,54,356 குற்றங்களும், மாநில குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் 23,46,929 குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.