PM MODI Trump: யு-டர்ன் அடித்த ட்ரம்ப், புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி - முடிவுக்கு வரும் இந்தியா-அமெரிக்கா பிரச்னை?
PM MODI Trump: மோடி உடன் எப்போதும் நட்பு பாராட்டுவேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னதை, பிரதமர் வரவேற்றுள்ளார்.

PM MODI Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உணர்வுகளை முழுமையாக பிரதிபலிப்பேன் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நட்பு பாராட்டுவேன் - ட்ரம்ப்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து கண்டித்து வந்த ட்ரம்ப், சீனாவிடம் இந்தியவை இழந்துவிட்டோம் என்றும் தெரிவித்தார், இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மோசமான சூழலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த சூழலில் இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்க நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், ”இரு நாடுகளும் எப்போதும் நண்பர்களாகவே இருந்து மிகவும் சிறப்பு வாய்ந்த உறவைப் பகிர்ந்து கொள்வதால் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், பிரதமர் மோடியின் செயல்பாடு எனக்கு வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
நான் எப்போது தயார் - ட்ரம்ப்
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “ இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க நான் எப்போதும் தயாராக இருப்பேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பனாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருப்போம். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவைக் கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை. எங்களுக்கு அவ்வப்போது இதுபோன்ற சூழல்கள் ஏற்படலாம்” என்றார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது என்று கேட்டப்பொது, அவை நேர்மறையாக தொடர்கிறது. நல்ல படியாக நடந்துகொண்டுள்ளாது என ட்ரம்ப் பதிலளித்தார்.
பிரதமர் மோடி ஹாப்பி ட்வீட்
ட்ரம்பின் பேச்சை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “அதிபர் ட்ரம்பின் உணர்வுகளையும் நமது உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறோம், முழுமையாகப் பரிமாறிக்கொள்கிறோம். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் பிரச்னை?
பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது 50 சதவிகித வரியை ட்ரம்ப் அறிவித்தார். இதனால், உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாக, ரஷ்யாவையும், இந்தியாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டதாக ட்ரம்ப் சாடினார். இதுபோக அமெரிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தியாவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் தான் இருநாடுகளும் நல்ல உறவை கொண்டிருப்பதாக அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி மாறி மாறி குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர். இதனால் இருநாடுகளுக்கு இடையே நிலவும் மனக்கசப்பு விரைவில் தீர்வடையும் என கூறப்படுகிறது.






















