தேவதாசி குடும்பத்தில் பிறந்து முதுகலை ஆய்வு மாணவியாக உயர்ந்து நிற்கும் மஞ்சுளா..
தொடர்ச்சியான கல்வி உதவியின் மூலமே தேவதாசிபெண்களின் முன்னேற்றத்திற்குரிய வழிமுறைகளைக் கண்டறிய முடியும் . பெண்ணை அடிமையாகக் காணும் மனோபாவத்தை மாற்றி அமைக்க சமூக இயக்கங்களும் முன்வர வேண்டும் - மஞ்சுளா
வடக்கு கர்நாடாக மாவட்டத்தில் தேவதாசி குடும்பத்தில் பிறந்த மஞ்சுளா (Manjula Telagade) என்ற பெண் பல்வேறு இன்னல்களுக்கு இடையே முதுநிலை பட்டப் படிப்பு படித்து வருகிறார். மேலும், தேவதாசிகளை உள்ளடக்கிய சமூக கட்டம்மைப்பு என்ற தலைப்பில் தனது முதுநிலை ஆய்வுக் கட்டுரயை எழுதி வருகிறார்.
இந்திய சமூகத்தில் இன்னமும் ஆழமாக பல்வேறு விதங்களில் தேவதாசி முறை காலூன்றி இருப்பதாக மஞ்சுளா தெரிவிக்கிறார். வடக்கு கன்னட பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் தாலுகாவில் உள்ள தொலைதூர கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஏதோவொரு நபர் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.
சிறுவயதில் இருந்தே, தேவதாசி பெண்ணுக்குரிய சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை மஞ்சுளா கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பில், தேவதாசி பணிக்குத் திரும்ப, மேல் வர்க்கத்தினர் கட்டாயப்படுத்தியதாகவும், பாலியல் இச்சைகளுகாகவும் நிர்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், அடிமைக் காற்றை சுவாசிப்பதை விட மடிந்துவிடுவதே மேல் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருந்த காரணத்தினால் தான் தற்போது ஆதிக்கப் பிடியில் இருந்து விடுபட முடிந்ததாகவும் கூறுகிறார்.
கலையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டாலும், பெண்ணடிமைத் தனமே இதன் முக்கிய நோக்கமாக இருந்து வந்தது. தேவதாசிப் பெண்ணுக்குரிய சமூக உரிமைகள் மறுக்கப்பட்டன. தேவதாசிப் பெண்கள் மேல் வர்க்கத்தினர் பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இத்தகைய, பெண்ணடிமை முறையை ஒழித்துக்கட்ட பல்வேறு பகுத்தறிவு இயக்கங்கள் உருவாகின. ஆனால், இன்றும் தேவதாசி முறை மறைமுகமாகவும், ஆழமாகவும் தொடர்கின்றது. பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தேவதாசிப் பெண்கள் எதிர் கொண்டு வரும் மன அவலங்கள், தேவதாசி பெண்களுக்கே உரிய சமூக ஒடுக்கல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகளில் தகப்பன் பெயரைக்கேட்டு நோகடிக்கின்றனர். விண்ணப்பத்தில் தேவதாசி என்று சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைப் பார்த்து, உங்களுக்கு பல தகப்பன்கள் இருப்பார்கள் என்று நையாண்டி செய்கின்றனர்.
தேவதாசிகளின் வளர்ச்சி என்ற பெயரில் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் கூட போதுகரமானதாக இல்லை. தொடர்ச்சியான கல்வி உதவியின் மூலமே தேவதாசிப் பெண்களின் முன்னேற்றத்திற்குரிய வழிமுறைகளைக் கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கிறார். பெண்ணை அடிமையாக காணும் மனோபாவத்தை மாற்றி அமைக்க சமூக இயக்கங்களும் முன்வர வேண்டும் என்றும் வாதாடுகிறார்.
தேவதாசி முறை ஒழிப்பு:
இந்திய மாநிலங்களில் முன்னோடியாக, நீதிக்கட்சியின் ஆட்சியில் பெரியாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி, தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். இது, நாளடைவில் பேரியக்கமாக மாறி 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.