இந்தியாவில் 3 ஆண்டுகளில் 1.12 லட்சம் தினக்கூலிகள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!
2019ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டு காலத்தில் மொத்தம் 1.12 லட்சம் கூலி தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. நடுவில் இடைவெளியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. கேள்வி நேரத்தில் மானிய கோரிக்கைகளுக்கு அந்தந்த துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதில் அளிப்பர்.
3 ஆண்டுகளில் 1.12 லட்சம் பேர்:
அந்த வகையில், கூலி தொழிலாளிகள் தற்கொலை குறித்து பதில் அளித்த மத்திய அரசு, 2019ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டு காலத்தில் மொத்தம் 1.12 லட்சம் கூலி தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி பேசிய மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், "66,912 இல்லத்தரசிகள், 53,661 சுயதொழில் செய்பவர்கள், மாத சம்பளம் பெறும் 43,420 நபர்கள், 43,385 வேலையில்லாதவர்கள் இந்தக் காலப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்கள், விவசாயிகள்:
2019, 2020 மற்றும் 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில், 35,950 மாணவர்களும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 31,839 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2008இன் படி, அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் உட்பட, அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு, வாழ்க்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு, முதியோர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகப்பேறு நலன்கள் தொடர்பான விஷயங்களில் தகுந்த நலத்திட்டங்களை உருவாக்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை வழங்குவது அரசுக்கு அவசியமாகிறது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மூலம் ஆயுள் மற்றும் மாற்றுத்திறனாளி காப்பீடு வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் 18 முதல் 50 வயது வரையில் வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு உள்ளவர்களுக்குக் கிடைக்கும்" என்றார்.
விமர்சனம்:
முன்னதாக, குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.
எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளித்து பேசியிருந்தார். ஆனால், எதிர்கட்சியினர் விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிக்காமல் காங்கிரஸ், நேரு குடும்பத்தை விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.