CWC meet: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!
வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பதிலுரைக்கும் பொறுப்பு போன்ற கட்சி ஜனநாயக மாண்புகளை கேள்விக்கேட்கும் விதமாக ராகுல்காந்தியின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக அதிருப்தியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தி பஞ்சாப் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு அதிருப்தி தலைவர்கள் கடிதம் எழுதியிருந்த நிலையில், அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் அமரிந்தர் சிங் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விதம், படுதோல்வியில் முடிந்த நவ்ஜோத் சிங் நியமனம், கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் வீட்டின் முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் ஆற்றிய எதிர்வினை போன்ற முக்கிய பிரச்சனைகள அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அடிப்படை சீர்த்திருத்தம் வேண்டி 23 அதிருப்தி காங்கிரஸ்காரர்கள் (G23) கடந்தாண்டு கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதில் குலாம் நபி ஆசாத், ஆனந்த சர்மா ஆகியோர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பெற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பின், இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியின் அடுத்த தலைவரை நியமிக்கும் பணி கடந்த இரண்டு வருடங்களாக தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே, ஜோதிராதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பிரபலமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறத் தொடங்கினர்.அதிலும், குறிப்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா இழக்க வைத்தார். மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் சச்சின் பைலட்- அசோக் கெலாட் இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இதேநிலை தொடர்ந்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு படுதோல்வியை சந்திக்க நேரிடம் என்பதை உணர்ந்த சில தலைவர்கள் கட்சிக்குள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்.
பொதுவாக, காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்புக்குரல் ஒன்றும் புதிதில்லை என்றாலும், இந்த எதிர்ப்புக்குரல் மிகவும் பரவலான தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டது. இந்த ஜி- 23 தலைவர்கள் பட்டியலில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் மற்றும் மூத்த தலைவர்கள் இதில் அடங்கியுள்ளனர்.
ராகுல் காந்தியின் தீவிர இந்துத்துவ எதிர்ப்பு, இடதுசாரி சிந்தனையை தழுவிய அரசியல் நிலைப்பாடு (அம்பானிக்கு எதிரான குரல்), மிதவாதிகளை புறந்தள்ளும் போக்கு என்பதே G23 தலைவர்களின் முக்கிய அதிருப்தியாக உள்ளது.
கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை எடுத்துவருகிறார். காங்கிரஸ் தலைவருக்கு தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் காரணமாகவும் இது ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் அடிப்படை மாண்புகளுக்கு சமரசம் செய்து கொள்ளாத இளம் தலைவர்களை ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தி வருகின்றார். கட்சியின் அடுத்த தலைவர் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, மாநில காங்கிரஸ் கமிட்டியில் சில முக்கிய மாற்றங்களை செய்து வருகிறார். உதாரணமாக, இளம் தலைவர்களின் ஒருவரானா அனுமுளா ரேவந்த் ரெட்டி-ஐ தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவையும் நியமிக்கப்பட்டனர். கட்சியை பலப்படுத்தும் விதமாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கன்ஹையா குமாரை காங்கிரஸ் கட்சி வரவேற்றது.
எவ்வாறாயினும், கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத ராகுல் காந்தி எடுக்கும் நடவடிக்கைகள் தான் கபில் சிபில் போன்ற தலைவர்களை வேதனையடைய வைக்கிறது. வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பதிலுரைக்கும் பொறுப்பு போன்ற கட்சி ஜனநாயக மாண்புகளை கேள்விக்கேட்கும் விதமாக ராகுல்காந்தியின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக அதிருப்தியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும், வாசிக்க:
Kanhaiya Kumar : மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் நண்பனாகியுள்ளேன் - கன்ஹையா குமார்