Uttarkashi Tunnel Disaster: என்ன! 41 பேரின் உயிரை காப்பாற்ற பயன்படுத்தப்பட்டது தடை செய்யப்பட்ட ‘எலி வளை சுரங்க முறையா?’
Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி சுரங்க விபத்தில் 41 பேரின் உயிரை காப்பாற்ற பயன்படுத்தப்பட்ட, தடை செய்யப்பட்ட எலி வளை சுரங்க முறை பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறியலாம்.
Uttarkashi Tunnel Disaster: உத்தரகாசி மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்ட எலி வளை சுரங்க முறை, கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.
உத்தரகாசி சுரங்க விபத்து:
உத்தராகண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியாற்றி வந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பயன்படுத்தப்பட்ட அனைத்து உயர் தொழில்நுட்பங்களும், இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் கொண்டெ மேற்கொள்ளப்பட்ட அனைத்துமே தோல்வியையே சந்தித்தன. இறுதியில், பாதுகாப்பற்றது என 9 ஆண்டுகளுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, எலி வளை சுரங்க முறை தான் 41 பேரை உயிருடன் மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
எலி வளை சுரங்கம் என்றால் என்ன?
எலி வளை சுரங்கம் என்பது 4 அடிக்கு மேல் அகலமில்லாத மிகச் சிறிய குழிகளைத் தோண்டி நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் முறையாகும். சுரங்கத் தொழிலாளர்கள் நிலக்கரி இருக்கும் பகுதியை அடைந்தவுடன், நிலக்கரியைப் பிரித்தெடுக்க பக்கவாட்டில் சுரங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. வெளியே கொண்டு வரப்படும் நிலக்கரி அருகிலேயே கொட்டப்பட்டு பின்னர் நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. எலி வளை சுரங்கத்தில், தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் நேரடியாக நுழைந்து தோண்டுவதற்கு கையில் வைத்திருக்கும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இது மேகாலயாவில் உள்ள சுரங்கங்களில் பின்பற்றப்படும் மிகவும் பொதுவான முறையாகும். அங்கு நிலக்கரி ஆதாரமானது மிகவும் குறைவாகவே இருப்பதும், வேறு எந்த முறையும் பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக இருப்பதுமே இதற்கு காரணமாகும். சிறிய அளவிலான சுரங்கப்பாதைகள் என்பதால் இந்த அபாயகரமான பணிகளில் குழந்தைகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். வாழ்வாதாரத்திற்கு குறைந்த வாய்ப்புகளை கொண்ட மேகாலயாவில், பலர் இந்த ஆபத்தான வேலையை தேர்வு செய்கின்றனர். இதுபோன்ற சுரங்கங்களில் வேலை பெறுவதற்கு பல சிறுவர்கள், தங்களது வயதை அதிகமாக கூறி பணிக்கு செல்கின்றனர்.
எலி வளை சுரங்கம் தடை செய்யப்பட்டது ஏன்?
தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014-ல் எலி வளை சுரங்கத்தை அறிவியல் பூர்வமற்றது என்று தடை விதித்தது. ஆனாலும், இந்த நடைமுறை தற்போதும் தொடர்ந்து பரவலாக உள்ளது. வடகிழக்கு மாநிலத்தில் எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கத்தில் வெள்ளம் சூழ்ந்து 15 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த மீட்புப் பணியில் இரண்டு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. 2021 இல் ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு மீட்புக் குழுக்கள் நடவடிக்கையை நிறுத்துவதற்குள் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எலி வளை சுரங்கம் முறையால் சுற்றுச் சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியிலும், மாநில அரசுக்கு சுரங்கம் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. மணிப்பூர் அரசாங்கம் எலி வளை சுரங்கத்திற்கான தடையை எதிர்த்து பிராந்தியத்திற்கு வேறு சாத்தியமான சுரங்க பணி வாய்ப்புகள் இல்லை என்று வாதிட்டது. 2022 இல் மேகாலயா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு மாநிலத்தில் எலி வளை சுரங்க முறை தொடர்ந்து பின்பற்றப்படுவதை உறுதி செய்தது.
#UttarakhandTunnel | Rescuers are only reportedly 3 metres away from the trapped tunnel workers. The Rescue ops is reliant on #ratholemining - a banned practice of digging very small tunnels to extract coal - to save these trapped workers. pic.twitter.com/ByO9eDIWMJ
— Mojo Story (@themojostory) November 28, 2023
உத்தராகண்ட் மீட்பு பணி:
அந்த தடை செய்யப்பட்ட எலி வளை சுரங்க நடைமுறை தான் உத்தராகண்ட் சுரங்க விபத்தில் மீட்பு பணியில் 41 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆகர் இயந்திரத்தால், இடிபாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து துளையிட முடியாமல் தோல்வியை தழுவியது. இறுதியில், எலி வளை சுரங்க முறையில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் 12 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்டன. ஆனால், அவர்கள் சுரங்கங்களில் பணியாற்றுபவர்கள் அல்ல என உத்தராகண்ட் மாநில அரசு விளக்கமளித்துள்ளது.
இந்த குழுவில், ஒருவர் இடிபாடுகளுக்கு மத்தியில் துளையிட, மற்றொருவர் இடிபாடுகளைச் சேகரிக்கிறார். மூன்றாவது நபர் தள்ளுவண்டி மூலம் அந்த உடைக்கப்பட்ட கற்களை வெளியேற்றினார். 800 மிமீ குழாயின் உள்ளே கையால் பிடிக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி அவர்கள் இடிபாடுகளை அகற்றினர். மண்வெட்டி உள்ளிட்ட சில சிறப்பு கருவிகளை தான் அவர்கள் பயன்படுத்தினர். சுரங்கத்தில் தொடர்ந்து உள்ளே செல்லும் போது சுவாசிக்க தேவைப்படும் ஆக்ஸிஜனுக்காக, அவர்கள் ப்ளோயர் ஒன்றை உடன் எடுத்து சென்றனர். இந்த வகையான துளையிடல் சோர்வை ஏற்படுத்தும் என்பதால், இரண்டு பணியாளர்கள் மாறி மாறி பணியை மேற்கொள்வார்கள். மீட்புக் குழுக்களின் கூற்றுப்படி, இந்த பணியாளர்கள் பாறைகள் மட்டுமின்றி, உலோகத் தடைகளை கூட குடைந்து எடுப்பதில் வல்லுநர்கள் என கூறப்படுகிறது.