Crime: காதலிக்க மறுத்த இளம்பெண்.. 13 முறை கத்தியால் குத்திய இளைஞர்...டெல்லியில் ஷாக்!
டெல்லியில் இளம்பெண் ஒருவர் 13 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. சமீபத்தில் கூட, 16 வயது சிறுமி, இளைஞரால் 25 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
13 முறை கத்தியால் குத்தப்பட்ட பெண்:
தெற்கு டெல்லியின் லடா சராய் பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் நேற்று மாலை 6.30 மணிக்கு நேர்காணலுக்கு செல்வதற்காக வாடகை கார் ஒன்று புக் செய்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் புக் செய்த இடத்திற்கு கார் வந்தது. அதில், ஏறி அமர்ந்த பிறகு, அவரை பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர் காருக்குள் நுழைந்ததாக தெரிகிறது. பின்னர், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில், கடும் கோபத்தில் இருந்த இளைஞர், தான் கையில் வைத்திருந்த கத்தியால், அந்த பெண்ணை பலமுறை குத்தியிருக்கிறார்.
13 முறை கத்தியால் குத்தப்பட்டதில், பெண்ணின் முகம், கைகள், தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அந்த பெண் அங்கிருப்பவர்களிடம் 'என்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்று உதவியும் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்:
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர், 27 வயதான கவரவ் பால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் இவர், குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பாதிக்கப்பட்ட பெண்ணை இரண்டரை வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை அந்த பெண்ணிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு தந்தை இல்லாததால் குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்திருந்தார். இதனை அந்த இளைஞரிடம் கூறியும் அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், பெண்ணை கத்தியால் குத்தி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.