COVID-19 Vaccine Registration: 18-44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு இன்று துவக்கம்: அதற்கான வழிமுறைகள் இதோ!
18 முதல் 44 வயதுடையவர் நீங்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை உங்கள் நலன் கருதி விளக்குகிறது ABP நாடு.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை பேராபத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் திணறி வருகின்றன. தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தற்போது பல்வேறு மாநிலங்களில் 50 சதவீத மருத்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது எனவும், பல இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவிவருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துவருகிறது. இந்த நிலையில் தான் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற இந்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டதோடு, எவ்வாறு அதனைப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அதன்படி 18-44 வயதுடைய கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் துவங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முன்பதிவு எவ்வாறு மக்கள் மேற்கொள்ளவேண்டும், எந்த இணையத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்….
1. 18-44 வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் கோவின் ஆப் (coWiN APP) அல்லது ஆரோக்கிய செயலி இணையத்திற்கு சென்று தங்களுடைய மொபைல் எண்ணினை குறிப்பிட்டு ஓடிபி உதவியோடு இணையத்திற்குள் செல்ல வேண்டும்.
2. யாருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறதோ? அவருடைய ஆதார் அட்டை , பான் கார்டு அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டை இருந்தால் அதனை இணையத்திற்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நாளான்று மறக்காமல் அடையாள அட்டையினை கையில் எடுத்துச்செல்ல வேண்டும்.
3. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவின் போது தங்களுடைய பின்கோடுடன் முகவரியை பதிவிடும் போது, அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் நமக்கு காண்பிக்கப்படும், மேலும் அதில் காலை மற்றும் மாலை எந்த நேரம் தேவையோ அதனை பதிவிட்டுக்கொள்ளலாம்.
4. இது அரசு மருத்துவமனை மட்டுமில்லை தனியார் மருத்துவமனையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்யும் பட்சத்தில், தேவையின்றி மக்கள் மருத்துவமனைக்கு அழைய நேரிடாது எனவும், கொரொனா தடுப்பூசி பற்றாக்குறையான சமயத்தில் எப்பொழுது தடுப்பூசி கிடைக்கப்பெறுகிறதோ? அந்த நேரத்தில் வந்து மக்கள் பயன்பெற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவும் இந்த முன்பதிவு நடைமுறை இன்று முதல் துவங்கியுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது அந்தந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவிக்கையில், மே 20 ஆம் தேதிக்கு கோவாக்சில்டு வேக்சின் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்களும் மே 15 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.