Corona Myths & Facts: கொரோனா பாதித்தவர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? ICMR சொல்வது என்ன?
தாய்ப்பால் கொடுப்பதனால் எந்த வித பாதிப்பும் இல்லை, தாய்மார்கள் அச்சம் கொள்ளாமல் தாய்ப்பாலினை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் : ICMR
கொரோனா பாதிப்புக்குள்ளான பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் எனவும், முன்னதாக முகக்கவசம் அணிந்தும் கைகளை நன்றாக சுத்தம் செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொத்து சேர்த்து வைக்கிறார்களோ? இல்லையோ? ஆனால் குழந்தைகளை பெற்றவுடன் அவர்களுக்கு தாய்ப்பால் வழங்குவதை மறந்துவிடக்கூடாது. அதனை விட பெரிய செல்வம் வேறு ஏதும் இல்லை. ஆம் இந்த உலகில் நாம் உயிர் வாழும் கடைசி நிமிடங்கள் வரையிலான ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது, பிறந்த சில நொடிகளில் குழந்தைகள் பருகும் தாய்ப்பால் தான். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தாய்ப்பாலினை கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி வரும் நேரத்தில், குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகம் தற்போது அதிகளவில் எழுந்து வருகிறது.
உதாராணமாக தமிழத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று இருந்த நிலையில், அதற்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? அவ்வாறு கொடுத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தைக்கும் தொற்று பரவிவிடும் என்ற அச்சத்தில் உறவினர்கள் தாய்ப்பால் கொடுப்பதனை நிறுத்தி விட்டனர். இதனையடுத்து குடும்பத்தினர் குழந்தைகளுக்கு திட உணவுகளை வழங்கி பாதுகாத்து வந்துள்ளனர்.
7 நாட்களுக்கு குழந்தையினை பார்க்காமல் தாய் இருந்துள்ளார். பின்னர் தொற்று குணமாகி குழந்தையினை மீண்டும் சந்தித்தபோது, குழந்தை தாய்ப்பாலுக்கு அழுதுள்ளது. ஆனால் மீண்டும் தாய்ப்பாலினை தரும்போது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தினையடுத்து மருத்துவர்களின் அறிவுரையினை பெற முயன்றுள்ளனர். இதுபோன்ற பலர் மருத்துவமனைகளில் இதே கேள்விகளோடு பலர் மருத்துவர்களை அணுகி வருகின்றனர். இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பதிலளித்துள்ளது.
ஏற்கனவே கொரொனா தொற்றின் முதல் அலை ஆரம்பித்த சில மாதங்களிலே அதாவது ஏப்ரல் 2020-ஆம் ஆண்டில், தாய்ப்பால் கொடுப்பதனால் எந்த வித பாதிப்பும் இல்லை எனவும், எனவே தாய்மார்கள் அச்சம் கொள்ளாமல் தாய்ப்பாலினை அவர்களது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என இந்திய மருத்து ஆராய்ச்சி கழகம் (ICMR )தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக குழந்தையின் தாய் அவர்களது கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து கொண்டு தாய்ப்பாலினை கொடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) போன்ற சுகாதார நிறுவனங்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த அறிவுரைகளை தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான செய்திகள் பரவலாக பேசப்படவில்லை என மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மக்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் கொடுத்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் தேசிய நியோனாட்டாலஜி மன்றம் Nationa (l Neonatology Forum ) சமீபத்தில் ஹைதராபாத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதினால் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தை நீக்கியது. அதில் தாய்ப்பால் மூலம் வைரஸ் பரவுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை எனவும் கொரோனா தொற்று பாதித்த தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு முன்னர், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்த கொள்வது போன்ற முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும் என கூறியுள்ளனர். மேலும் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னதாக அவர் பாலை வெளியேற்றி குழந்தைக்கு உணவளிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று தான் கடந்த ஜூன் 2020-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு( WHO) தாயிடமிருந்து குழந்தைகளுக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இல்லை எனவும், குழந்தைகளுக்கு கொரோனாவின் ஆபத்து குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக தாய்ப்பால் குழந்தைகளுக்கு தொற்று நோயினைத்தடுப்பதற்கும், ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கு உறுதுணையாக உள்ளது. எனவே கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளவர்களும் எந்தவித சந்தேகமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.