இந்தியாவில் கொரோனா மிக மோசமானதாக மாறி வருகிறது - எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மோசமானதில் இருந்து மிக மோசமானதாக மாறி வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறினார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மோசமானதில் இருந்து மிக மோசமானதாக மாறிக்கொண்டு இருக்கிறது. சில மாவட்டங்களில், கடுமையான சூழலை எதிர்கொண்டு இருக்கிறோம். ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளது” என்றார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து முக கவசம் அணிவது 70 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாகவும், அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.