Corona Alert: அச்சுறுத்தும் கொரோனா - நாளை மறுநாள் நாடு முழுவதும் சுகாதார மையங்களிலும் அவசரகால ஒத்திகை..!
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயற்சி சோதனை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

தயார் நிலை பரிசோதனை:
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயற்சி சோதனை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
செவ்வாய்கிழமை பரிசோதனை:
இந்த பயற்சி சோதனை வரும் செவ்வாய்கிழமை நடத்தப்பட உள்ளது. அதில், சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா, நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா, ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும். இந்தியாவில் முன்னதாக ஏற்பட்ட கொரோனா அலைகள், குறிப்பாக இரண்டாம் கொரோனா அலை, மருத்துவ சுகாதார கட்டமைப்பை உலுக்கி எடுத்தது.
மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். தங்களின் உறவினர்களுக்காக படுக்கைகளை தேடி அலைந்த சம்பவம் எல்லாம் நடந்தது.
சுகாதார நடவடிக்கைகள் அவசியம்:
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று எழுதிய கடிதத்தில், "அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அவசரநிலையை சமாளிக்க தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். எனவே, வரும் டிசம்பர் 27ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் (அடையாளம் காணப்பட்ட கோவிட்-அர்ப்பணிப்பு சுகாதார வசதிகள் உட்பட) ஒத்திகை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள்:
புவியியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா? குறிப்பாக தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதி கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ICU படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் ஆகியவை இருக்கிறதா? என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த பயற்சி ஒத்திகையில் நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயுஷ் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனரா ஆகியவையும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும்.
ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா என்பது உறுதி செய்யப்படும். ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் கிட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் கோவிட் சோதனை திறன்களை அதிகரிப்பதையும் இந்த பயிற்சி ஒத்திகை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

