மேலும் அறிய
Advertisement
Black Fungus Threat: மஹாராஷ்ட்ரா, டெல்லிக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்: குறையும் கொரோனா, கூடும் பூஞ்சைத்தொற்று பாதிப்புகள்
வழக்கமாக, சர்க்கரை நோய், ஸ்டீராய்டு மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டவர்களிடம் பூஞ்சை பாதிப்பு இருக்கும், ஆனால் இந்த அளவு பாதிப்பை நான் பார்த்ததே இல்லை என்கிறார் பத்மா ஸ்ரீவத்சவா
கொரோனாவிலிருந்து டெல்லி, மஹாராஷ்ட்ரா இரண்டுமே மீண்டுவருவது சற்றே ஆறுதலாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்தபடி இருக்கிறது. கொரோனா முதல் அலையின்போதே தொற்றிலிருந்து மீண்டவர்களை அரிதான கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருந்தது. இப்போதைய இரண்டாம் அலையில் அதன் பாதிப்பு கூடுதலாகவும் அதிக இடங்களிலும் கண்டறியப்படுகிறது. நாட்டின் வடக்கு, வடமேற்கு மாநிலங்களில் மியூகர்மைக்கோசிஸ் எனப்படும் இந்த கரும்பூஞ்சை தாக்குதலால் நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.
தலைநகர் டெல்லியில் அன்றாடம் கிட்டத்தட்ட 100 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கின்றனர் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்- எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று 20 பேருக்கும் மேல் கருப்பு பூஞ்சை பாதிப்படைந்தவர்கள் சேர்ந்துள்ளனர் என்று அதன் நரம்பியல் துறை தலைவர் பத்மா ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். வழக்கமாக, சர்க்கரை நோய், ஸ்டீராய்டு மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டவர்களிடம் இந்த பாதிப்பு இருக்கும் என்றாலும் இந்த அளவு பாதிப்பை நான் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார். ஒற்றை இலக்கத்தில் இருந்துவந்த பாதிப்பு இரட்டை இலக்கத்துக்கு வந்தது; இப்போது நகரில் அது 100-ஐக் கடந்துவிட்டது; எனவே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டுகளை அமைத்திருக்கிறோம் என்றும் பத்மா தெரிவித்தார்.
டெல்லியின் மேக்ஸ் மருத்துவமனையில் கரும்பூஞ்சை சிகிச்சைக்காக நேற்று 25 பேர் சேர்ந்துள்ளனர். கங்காராம் மருத்துவமனையில் 48 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 16 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் அதன் தலைவர் மருத்துவர் டி.எஸ்.ராணா தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தில் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். இதற்காக மட்டும் மருத்துவக்கல்லூரிகளில் தலா 20 படுக்கைகளை அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பெங்களூருவில் மட்டும் 75 பேர் பூஞ்சைத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆறு பேர் மைசூரு மருத்துவமனையிலும் ஒருவர் பெலகாவியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 97 பேர் இந்த பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த பூஞ்சைத் தொற்று பாதிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னரே குஜராத், மஹாராஷ்ட்ர மாநிலங்களில் தொடங்கியது. மூன்று வாரங்களாக குஜராத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் குஜராத்தின் சூரத் நகரில் கரும்பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, புனே ஆகிய நகரங்களிலும் முதல் கட்டமாகவும் அடுத்து தானேவிலும் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது 17 மாவட்டங்கள்வரை பாதிப்பு இருக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஸ் தோபே கூறியுள்ளார். ஒரு வாரத்துக்கு முன்னரே அங்கு 2 ஆயிரம் பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு இருக்கக்கூடும் என அவர் கூறினார். அது வேகமாக அதிகரித்து ஒரு வாரத்தில் மேலும் 500 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நேற்று அவரே கூறியுள்ளார். மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் இதுவரை 90 பேர் கரும்பூஞ்சைத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது 100 பேர் இந்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் மாநில அரசு தனி வார்டை அமைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், லக்னோ, கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் நேற்றுவரை 50 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சேர்ந்தவர்கள் 9 பேர். இதுவரை ஆறு பேருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது; அதில் ஒருவர் குணமாகி வீடுதிரும்பியுள்ளார்; நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்தியப்பிரதேசத்தில் இந்தப் பிரச்னையை முன்கூட்டியே அறிந்து தடுக்கும்வகையில், மூக்குவழியான உள்நோக்கி கண்டறிதல் சோதனையை அரசு முன்னெடுத்துள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் இந்த சோதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion