பா.ஜ.க. தேர்தல் வியூக கலந்துரையாடலில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரர்ராஜன் - கிளம்பியது புது சர்ச்சை..!
பா.ஜ.க.வின் தேர்தல் வியூக டிவிட்டர் கலந்துரையாடலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டதால் சர்ச்சை
பா.ஜ.க.வின் தேர்தல் வியூக டுவிட்டர் கலந்துரையாடலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சட்ட பதவியான ஆளுநர் பொறுப்பை வகிப்பவர், கட்சி சார்பின்றிச் செயல்பட வேண்டும் என்ற மரபை மீறி தமிழிசை செயல்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வினர் நடத்திய ட்விட்டர் ஸ்பேஸ் மீட்டிங்கில் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றது சர்ச்சை ஆகியுள்ளது.
அரசியலமைப்புச் சட்ட பதவியை வகிக்கும் ஆளுநர்கள், கட்சி சார்பு கொண்டவராகச் செயல்படக்கூடாது என்பது சட்ட விதி உள்ளது. பா.ஜ.க. கட்சியினரைப் போலவே ஆளுநர்கள் பேசி வருவதாக பல இடங்களில் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ட்விட்டர் ஸ்பேசசில், பா.ஜ.க.வினர், 2024 தேர்தலில் தென்னிந்தியாவுக்கான பாஜகவின் வியூகம் பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். இந்த ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடலில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்றுள்ளார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கட்சி சார்பின்றிச் செயல்பட வேண்டிய ஆளுநர், பாஜக தேர்தல் வியூக கலந்துரையாடலில் ஈடுபட்டது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் அந்தந்த மாநில முதல்வர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். தன்னிச்சையாக கூட்டம் நடத்துவது, பா.ஜ.க. ஆதரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஆளுநர்கள் ஈடுபடுவது விமர்சிக்கப்பட்டு வருகிறது.