Five State Election: மிஷன் கர்நாடகா ஓவர்.. ஐந்து மாநில தேர்தலை குறிவைக்கும் காங்கிரஸ்..- ஸ்கெட்ச் போடும் கார்கே
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்னும் இரண்டு மாதங்களில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல், மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகின்றன.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்:
இதற்காக, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன்விளைவாக, I.N.D.I.A. என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி உருவானது.
இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிள் கூட்டம் பாட்னாவிலும் பெங்களூருவிலும் நடைபெற்றது. பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து எதிர்க்கட்சிகள் தலைவர்கள், இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தனர்.
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்னும் இரண்டு மாதங்களில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஐந்து மாநில தேர்தலை குறிவைக்கும் காங்கிரஸ்:
தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் காங்கிரஸே, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே, I.N.D.I.A. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கர்நாடக தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, இந்த ஐந்து மாநில தேர்தலில் கவனம் செலுத்த காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை, சத்தீஸ்கர் செல்லும் அவர், தலித் மக்கள் அதிகம் வாழும் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதை தொடர்ந்து, தெலங்கானாவில் உள்ள ஜாஹிராபாத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் நகருக்கு செல்கிறார். செப்டம்பர் 2ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகா, இமாச்சல பிரதேசம் மாநிலங்களின் உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெற்றிபெற்றது போல் ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
அதேபோல, தேர்தல் வாக்குறுதிகளும் மாநில பிரச்னைகளை மையப்படுத்தியே அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து, கார்கே, தனது பயண திட்டத்தை வகுத்துள்ளார். தலித் மக்களின் வாக்குகளை குறிவைத்து காங்கிரஸ் வேலை செய்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.