நெருங்கும் தேர்தல்.. கேதார்நாத் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் வழிபாடு மேற்கொண்டுள்ளார்.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் நாளை மறுநாளுடன் (நவம்பர் 7ஆம் தேதி) தொடங்குகிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஐந்து மாநில தேர்தல்:
மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும், நவம்பர் 25இல் ராஜஸ்தானிலும் நவம்பர் 30ஆம் தேதி, தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவும் காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. தெலங்கானாவில் கே.சி.ஆரின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதேபோல, மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? தேர்தலாக மாறியுள்ளது. ஆட்சியில் இல்லாத தெலங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவும் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி:
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் வழிபாடு மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஜெய் பாபா கேதார்நாத். இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாபா கேதார்நாத் ஆன்மீக தளத்தில் பாபா கேதாரை தரிசனம் செய்த ராகுல் காந்தி, நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ பிரார்த்தனை செய்தார்.
नमो-नमो हे शंकरा, भोलेनाथ शंकरा
— Congress (@INCIndia) November 5, 2023
जय त्रिलोकनाथ शम्भू, हे शिवाय शंकरा pic.twitter.com/asBIDcIccJ
நேற்று, சத்தீஸ்கரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக சாடினார். "சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும். நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை 'ஆதிவாசி' என்பதற்குப் பதிலாக 'வனவாசி' என பாஜக தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
'ஆதிவாசி' என்பது புரட்சிகரமான வார்த்தை. 'ஆதிவாசி' என்றால் நாட்டின் முதன்மையான சொந்தக்காரர்கள் என்று பொருள். இந்த வார்த்தையை பயன்படுத்தினால் காடு, தண்ணீர், நிலம் என அனைத்தையும் உங்களிடமே திருப்பித் தர வேண்டியிருக்கும் என்று பாஜகவினருக்குத் தெரியும்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.