Karnataka Elections 2023: கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்..? பார்வையாளர்களை நியமித்த காங்கிரஸ்..!
கர்நாடகாவின் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து சில மணி நேரங்களில் அங்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பார்வையாளர்கள் நியமனம்:
இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா மற்றும் பன்வர் ஜிதேந்திரா சிங் ஆகியோர் கர்நாடகாவின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் எனவும், அதில் எடுக்கப்படும் முடிவு கட்சி தலைமைக்கு வழங்கப்படும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்:
இதையடுத்து இன்று மாலையில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின், ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்பட உள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே, முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.
பிரியங்க் கார்கே முதலமைச்சரா?
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகர்ஜுனா கார்கேவை, அவரது இல்லத்தில் வைத்து மூத்த தலைவர் சித்தராமையா சந்தித்தார். இதுதொடர்பாக பேசிய மல்லிகர்ஜுனா கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ”கார்கே மற்றும் சித்தராமையா இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. இது அரசியல் சந்திப்பு இல்லை. முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக தான் எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நான் தான் முதலமைச்சர் என வீட்டின் வெளிப்புறத்தில் போஸ்டர்களை ஒட்டுவதன் மூலம் மட்டும் நான் முதலமைச்சர் ஆகி விட முடியாது” எனவும் கூறினார்.
தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி:
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை கைப்பற்றி ஆட்சியை இழந்துள்ளது. ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றும் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வெறும் 19 இடங்களை கைப்பற்ற, சுயேச்சை உள்ளிட்ட பிறர் 4 இடங்களை கைப்பற்றினார்.
கருத்து வேறுபாடு இல்லை - சிவக்குமார்
முதலமைச்சர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கருத்து மோதல் நிலவுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் “ மூத்த தலைவர் சித்தராமையாவுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சிக்காக நான் பலமுறை தியாகம் செய்துள்ளேன். தியாகம் செய்து, உதவி செய்து, சித்தராமையாவிற்கு உறுதுணையாக இருந்துள்ளேன். கடந்த ஆட்சியின் போது எனக்கு அமைச்சர் பதவி கொடுக்காதபோதும் அமைதியாக தான் இருந்தேன். " இவ்வாறு அவர் கூறினார்.