Udhayanidhi Complaint: சனாதன தர்மம் சர்ச்சை.. பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பறந்த புகார்..
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பிகார் மாநிலம் முசாபர்பூர் முதன்மை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சனாதனம் பற்றி பேசி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பிகார் மாநிலம் முசாபர்பூர் முதன்மை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி பேசியது என்ன?
சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்து கடுமையாக பேசியிருந்தார். "சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம்" என உதயநிதி தெரிவித்திருந்தார்.
மலேரியா, டெங்கு நோயுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு பேசிய அமைச்சர் உதயநிதி, "எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்தான். டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசியதாக கருத்து பரவி வருகிறது.
பிகாரில் வழக்குப்பதிவு:
இந்த நிலையில், சனாதனம் பற்றி பேசி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பிகார் மாநிலம் முசாபர்பூர் முதன்மை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர்தான், இந்த புகாரை அளித்துள்ளார்.
"அரசியல் ஆதாயத்துக்காகவும், சிலரது மக்களை திருப்திப்படுத்தவும் சமூகத்தில் பகையை பரப்பும் நோக்கத்தில் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்" என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உதயநிதி கருத்தை கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்து மதத்தை I.N.D.I.A கூட்டணி வெறுப்பதாகவும் கலாசாரம் மீது தாக்குதல் தொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சனாதனம் குறித்து தான் பேசிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "சனாதன தர்மம் சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்ய நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனிதநேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் சார்பாக நான் பேசினேன்" என்றார்.
இதையும் படிக்க: Udhayanidhi Stalin: ’சூழ்ச்சி செய்கிறார்கள், திரிக்கிறார்கள், மாற்றுகிறார்கள்..’ சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி விளக்கம்!