CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
CJI DY Chandrachud: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து, நவம்பர் 10ம் தேதி அவர் ஓய்வுபெறுகிறார்.
CJI DY Chandrachud: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் வழங்கிய அதிரடியான தீர்ப்புகள் சிலவற்றை இங்கே அறியலாம்.
ஓய்வு பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட்:
இந்திய தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அவரை தொடர்ந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 11-ம் தேதி பதவியேற்பார். நவம்பர் 9, 2022 அன்று பதவியேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கடைசி வேலை நாள் இன்று நவம்பர் 8 ஆகும். இந்தியாவின் மிக நீண்ட காலம் தலைமை நீதிபதியாக இருந்த யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட்டின் மகனான நீதிபதி சந்திரசூட் , 2016 முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
சந்திரசூட் வழங்கிய அதிரடியான தீர்ப்புகள்:
1-தேர்தல் பத்திரங்கள் வழக்கு: பிப்ரவரி 2024
உச்ச நீதிமன்றத்தின தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அரசியல் நிதியுதவிக்கான மத்திய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராக கடந்த பிப்ரவரியில் ஒருமனதாக தீர்ப்பளித்தது. அதில், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29C ஆகியவற்றில் திருத்தங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் அறிவித்தது.
2- தனியார் சொத்து: நவம்பர் 2024
நவம்பர் 5 அன்று வழங்கப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பில், அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் அனைத்து தனியார் சொத்துகளையும் மறுபங்கீடு செய்வதற்கு "சமூகத்தின் பொருள் வளம்" என்று கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது.
3- தனியுரிமைக்கான உரிமை: ஆகஸ்ட் 2017
ஆகஸ்ட் 2017 இல், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பிரிவு 21 இன் கீழ் தனியுரிமை என்பது , வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் உள்ளார்ந்த பகுதியாக பாதுகாக்கப்படுகிறது என்று ஒருமனதாக தீர்ப்பளித்தது. முன்னதாக, ”வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பரிசு என்றும், அவசரநிலையின் போது அது நிறுத்தி வைக்கப்படலாம் என்றும்” அவசர காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.
4 - டெல்லி அரசு Vs துணைநிலை ஆளுநர் - மே 2023:
இந்தியத் தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேசிய தலைநகர் பிரதேசத்தின் (NCT) சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, சேவைகளை நிர்வகிப்பதில் சட்டமன்றத்திற்கே அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் துணைநிலை ஆளுநரை காட்டிலும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டது.
5- ஹாதியா வழக்கு - ஏப்ரல் 2018
விருப்பமான ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமையானது அரசியலமைப்பின் 21வது பிரிவுடன் (உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) ஒருங்கிணைந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், “அரசோ அல்லது சட்டமோ கூட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பதை ஆணையிடவோ அல்லது இந்த விஷயங்களில் முடிவெடுக்க ஒவ்வொரு நபரின் இலவச திறனைக் கட்டுப்படுத்தவோ முடியாது” என சந்திரசூட் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
6- பிரிவு 377 ரத்து செய்வது
2018ம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா மற்றும் சந்திரசூட் உள்ளிட்ட 5 பேர் கொண்ட அமர்வு, ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் IPC பிரிவு 377 ஐ நீக்கியது . LGBTQ சமூகம் சமமான குடிமக்கள் தான், பாலியல் நோக்குநிலை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் சட்டத்தில் பாகுபாடு இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
7- சபரிமலையில் பெண்களுக்கான தடை நீக்கம்:
2018 செப்டம்பரில், கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் 10-50 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் நுழையக்கூடாது என்ற விதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது . தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இடம்பெற்று இருந்த நீதிபதி சந்திரசூட், இந்த வழக்கத்தை "தீண்டாமை" என்று குறிப்பிட்டார்.
8- ராமர் கோயில் தீர்ப்பு - நவம்பர் 2019:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு ஒப்படைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்ப்பளித்த, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வில் சந்திரசூட்டும் இடம்பெற்று இருந்தார்.
9- அர்னாப் கோஸ்வாமி வழக்கு: நவம்பர் 2020
2020 நவம்பரில், செய்தி தொகுப்பாளரும், ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமிக்கு, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான, நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஜாமின் வழங்கியது.
10- விபச்சாரத்தை குற்றமாக்குதல் : செப்டம்பர் 2018:
கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், திருமணத்தை மீறிய உறவு குற்றம் கிடையாது, குற்றமாக இருக்கவும் கூடாது என தீர்ப்பளித்தது. அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட், அந்த தீர்ப்பின் பெரும்பான்மையான கருத்தை எழுதினார். IPC இன் பிரிவு 497 அரசியலமைப்பிற்கு முரணானது, ஏனெனில் அது பிரிவுகள் 14, 15 மற்றும் 21 ஐ மீறுகிறது என குறிப்பிட்டார்.
சந்திரசூட் தொடர்பான சர்ச்சை:
இதனிடையே, சந்திரசூட் தொடர்பாக சில சர்ச்சைகளும் நிலவுகின்றன். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, பிரதமர் மோடியை தனது வீட்டிற்கு அழைத்து பூஜை நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், குழப்பமான வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கும்போது கடவுளை வழிபட்டு தீர்ப்பளிப்பேன் என சந்திரசூட் கூறியது சர்ச்சையானது.